‘இனி ஏஐ காலம்..’ கொளுத்திப் போட்ட எலான் மஸ்க்- மனிதர்களை அடிக்க பாயும் ஹுமனோய்டு ரோபோ

உலகளவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட ரோபோக்களின் பயன்பாடு நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் ஏஐ தொழில்நுட்பம் மனித குலத்தின் ஒட்டுமொத்த அறிவையும் விஞ்சிவிடும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்து வரும் வேளையில், அதற்குச் சான்றாக மனிதர்களைத் தாக்க முற்படும் ரோபோ ஒன்றின் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் சரட்டோ நகரில் உள்ள ஒரு முன்னணி எலக்ட்ரானிக்ஸ் கடையில் இந்த வினோதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த கடையில் வாடிக்கையாளர்களை உபசரிப்பதற்காக ‘சேமா’ என்ற பெயர் கொண்ட மனித உருவ ரோபோ  ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது கடைக்குள் வந்த வாடிக்கையாளர் ஒருவர், அந்த ரோபோவிற்கு அன்போடு கை கொடுக்க முயன்றுள்ளார். ஆனால், அந்த ரோபோ கை கொடுக்காமல் அப்படியே அசையாமல் நின்றுள்ளது. 

இதனால் சற்று எரிச்சலடைந்த அந்த நபர் ரோபோவை லேசாகத் தள்ளிவிட்டுள்ளார்.இதன் பின்னர் யாரும் எதிர்பாராத விதமாகத் திடீரெனத் தனது கட்டுப்பாட்டை இழந்த அந்த ரோபோ, தன்னைத் தள்ளிவிட்ட வாடிக்கையாளரை ஆக்ரோஷமாகத் தாக்க முயன்றது . மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரிந்த நபர் போலத் தனது கைகளை மிக வேகமாக அசைத்து, அந்த வாடிக்கையாளரை நோக்கிப் பாய்ந்து பஞ்ச் செய்யத் தொடங்கியது. ரோபோவின் இந்த திடீர் தாக்குதலைக் கண்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர்.

நல்ல வேளையாக இந்த விபரீத முயற்சியில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. தற்பொழுது அந்த ரோபோவின் இயக்கம் முழுமையாக நிறுத்தப்பட்டு, தீவிரப் பரிசோதனைக்காக ‘ரீபூட்’ செய்யப்பட்டுள்ளது.இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ, தொழில்நுட்பத்தின் ஆபத்தான மறுபக்கத்தைப் பிரதிபலிப்பதாகப் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். இயந்திரங்களிடம் மனிதர்கள் எப்பொழுதும் எச்சரிக்கையுடனேயே பழக வேண்டும் என ஒரு தரப்பினர் எச்சரிக்கும் வேளையில், இது வெறும் விளம்பரத்திற்காகத் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட வீடியோவாக இருக்கக்கூடும் என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் அண்மையில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில், இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அறிவையும் மிஞ்சும் என தெரிவித்திருந்த சூழலில் இப்படி ஒரு வீடியோ வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Source link