எழுதியவர்: மெளல்ஸ்ரீ சேத்
ராம ஜென்மபூமி தீர்த்த கோயில், ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ராவை அறக்கட்டளையின் முதல் முதன்மை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) நியமித்துள்ளது. காணிக்கை திருடப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அறக்கட்டளையின் நிதி மேலாண்மை குறித்த பரிசீலனைகள் தீவிரமடைந்த நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அறக்கட்டளையின் முன்னாள் பொதுச்செயலாளர் சம்பத் ராய் உட்பட 3 அதிகாரிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
“ஜிதேந்திர மிஸ்ரா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது முக்கிய பங்காற்றினார். இந்த நேரத்தில் தேவைப்படும் ஒழுக்கம் மற்றும் மேலாண்மைத் திறனை அவர் கொண்டு வந்துள்ளார். மிக முக்கியமாக, ராம பக்தர்களின் நம்பிக்கையை அவர் மீட்டெடுப்பார். பெரிய அளவிலான செயல்பாடுகளை நிர்வகித்த அனுபவம் கொண்ட அவர், இந்தப் பொறுப்பிற்கு மிகவும் பொருத்தமானவர்” என்று தேர்வுக்குழு உறுப்பினர் சுரேஷ் ஹவாரே தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தார். ஹவாரே அணுசக்தித் துறையில் 27 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அணுவிஞ்ஞானி ஆவார்; சீரடி ஸ்ரீ சாய்பாபா சமஸ்தான அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்துள்ளார். மூன்று நபர்கள் கொண்ட இத்தேர்வுக்குழுவின் மற்ற 2 உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி மற்றும் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் விஷ்ணுகாந்த் சதுர்வேதி ஆவர்.
ராமர் கோவில் அறக்கட்டளை புதன்கிழமை 2 புதிய அறங்காவலர்களையும் சேர்க்க வாய்ப்புள்ளது. எம்2கே (M2K) பவுண்டேஷன் தலைவரும், அசோக் சிங்கால் பவுண்டேஷனின் அறங்காவலருமான மகேஷ் பக்சந்த்கா, உள்ளூர் நீதிமன்றங்களில் ராம் ஜன்மபூமி வழக்குடன் தொடர்பிலிருந்த வழக்கறிஞர் மதன் மோகன் பாண்டே மற்றும் நிர்மல் யாதவ் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராமர் கோவிலில் காணிக்கை திருடப்பட்டதாகச் சமீபத்தில் எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, பொதுச்செயலாளர் சம்பத் ராய் மற்றும் உறுப்பினர் அணில் மிஸ்ரா ஆகியோரின் ராஜினாமாவால் இந்த காலியிடங்கள் உருவானது
மூன்றாவது காலியிடம், அயோத்தியின் முன்னாள் சமஸ்தானத்தைச் சேர்ந்த விம்லேந்திர பிரதாப் மிஸ்ரா கடந்த ஆண்டு காலமானதைத் தொடர்ந்து ஏற்பட்டது.
யார் இந்த மூன்று பேர்?
பக்சந்த்கா, அசோக் சிங்கால் பவுண்டேஷனின் அறங்காவலராகவும் உள்ளார்; மறைந்த ஆர்.எஸ்.எஸ் தலைவரைப் பற்றிப் புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுதோறும் மிதிவண்டிகள் வழங்குதல் மற்றும் மருத்துவ முகாம்களுக்கு உதவுதல் உட்பட காரியசேவக் புரமில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு சமூகப் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
வழக்கறிஞரான பாண்டே, விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி) அமைப்பில் தொடர்பில் உள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்பு, உள்ளூர் நீதிமன்றங்களில் ராம் ஜன்மபூமி வழக்கை நடத்துவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.
மூன்றாவது நபரான நிர்மல் யாதவ் ஒப்பீட்டளவில் அதிகம் அறியப்படாதவராக உள்ளார். அவரது பின்னணி பற்றிய விவரங்கள் இதுவரை குறைவாகவே கிடைத்துள்ளன.
இவர்கள் மூவரின் பெயர்களும் இறுதி செய்யப்பட்டால், அதில் சாதிப் பிரதிநிதித்துவமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகத் தெரியும். இந்த 3 புதிய சேர்க்கையில் ராம ஜென்மபூமி வழக்குடன் தொடர்புடைய ஒரு பிராமணரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (ஓ.பி.சி) சேர்ந்த ஒரு யாதவும் இடம்பெறுவர்.
‘ராமர் கோவில் அறக்கட்டளை சி.இ.ஓ-வை தேர்ந்தெடுப்பதற்கான வெளிப்படையான நடைமுறை நிறைவுற்றது’
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் முதன்மை செயல் அதிகாரியை (சி.இ.ஓ) தேர்ந்தெடுப்பதற்கான விரிவான, வெளிப்படையான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நடைமுறைகள் நிறைவடைந்துள்ளன… 5,585 விண்ணப்பங்களை ஆய்வு செய்த பிறகு, தேர்வுக்குழு 16 வேட்பாளர்களுடன் விரிவான கலந்துரையாடலை நடத்தியது. இன்று, உயர்தகுதி வாய்ந்த 3 வேட்பாளர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலைத் தேர்வுக்குழு அறக்கட்டளையிடம் சமர்ப்பித்துள்ளது. அறக்கட்டளை இறுதி முடிவை எடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
தேடல்குழுச் செயலாளர் சமீர் பாண்டா கூறுகையில்: “தனது விரிவான மதிப்பீட்டின் அடிப்படையில், ராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு உயர்தகுதி வாய்ந்த 3 தொழில்முறை வல்லுநர்கள் அடங்கிய பட்டியலைத் தேடல்குழு பரிந்துரைத்துள்ளது. தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனத்தை வழிநடத்தத் தேவையான மிக உயர்ந்த நிறுவன தலைமைத்துவம், மேலாண்மை நிபுணத்துவம், நேர்மை மற்றும் தொலைநோக்குப் பார்வையை இந்த வேட்பாளர்கள் கொண்டுள்ளனர்” என்றார்.
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பம் மற்றும் மனித மதிப்பீடு ஆகிய இரண்டையும் இணைத்து பல அடுக்கு மதிப்பீட்டின் மூலம் இத்தேர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் குழு தெரிவித்துள்ளது.
டெல்லி-என்.சி.ஆர், புனே மற்றும் சவல்பூர் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் செயல்பட்ட குழுக்கள், விண்ணப்பதாரர்களை மிகக் கடுமையான மற்றும் வெளிப்படையான முறையில் பரிசீலித்து சுருக்கப் பட்டியலைத் தயாரித்ததாகக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட பரிசீலனைக்கு பிறகு, வேட்பாளர்களின் எண்ணிக்கை 16 ஆகக் குறைக்கப்பட்டது. அவர்கள் ஆகஸ்ட் 3 முதல் 6 வரை இணையவழி கலந்துரையாடல்களிலும், அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அயோத்தியில் நேரடி நேர்காணலிலும் பங்கேற்றனர்.
தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனத்திற்குத் தலைமை தாங்குவதற்குத் தேவையான நிறுவனத் தலைமைத்துவப் பண்பு, மேலாண்மை நிபுணத்துவம், நேர்மை மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை விரிவாக மதிப்பீடு செய்த பிறகே இறுதி மூன்று வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டதாகக் குழு தெரிவித்துள்ளது.
‘ராமர் நிதி’ திருடப்படாது என நம்புகிறேன்: அகிலேஷ் யாதவ்
முதல் சி.இ.ஓ-வை தீர்மானிப்பதற்காக அயோத்தியில் ராம ஜென்மபூமி அறக்கட்டளைக் கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், ‘ராம் தன்’ (ராமர் கோவில் நிதி) திருடப்படாது என நம்புவதாகச் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை கருத்து தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், அயோத்தியில் ஏழை மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு மோசடி செய்யப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
“புதிய விஷயங்கள் நடக்கும் போது, கடந்த காலத்தில் நடந்ததை நாம் மறந்துவிடுவோமா? எங்களுக்கு யாரைப் பற்றியும் புகார்கள் இல்லை, ஆனால் காணிக்கை திருடப்பட்ட விதம் இருக்கிறதே… அதில் சாதாரண ஊழியர்களைச் சிறைக்கு அனுப்பிவிட்டு, பெரிய மனிதர்களைத் தப்பவிட்டு விட்டீர்கள். இனி ‘ராம் தன்'(ராமர் கோவில் நிதி) திருடு போகாது என்று நம்புகிறோம்” என்றார்.
மேலும், “அயோத்தி ஒரு உலகத்தரம் வாய்ந்த நகரமாக மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களின் (பா.ஜ.க) மனதிற்குள் பேராசை இருந்ததால், ஏழை மக்களின் நிலங்கள் மோசடி செய்யப்படுகின்றன” என்றும் அவர் கூறினார்.
