முதல்வர் படத்துடன் டீப் பேக் வீடியோ: சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை

சென்னை: முதல்வர் விஜய் படத்துடன் டீப் பேக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவும் நிலையில், அதனைஉருவாக்கியவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் இறங்கி உள்ளனர். இது போன்ற மோசடிகளில் இருந்து பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

பேஸ்புக் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக முதல்வர் விஜய் பேசுவது போன்று ஏஐ வாயிலாக உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று பரவி வருகிறது. பண உதவி தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளும்படி வாட்ஸாப் எண் ஒன்றை குறிப்பிட்டு தொடர்புகொள்ளும்படி அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஹிந்தி மொழியில் உள்ள அந்த வீடியோ சிபிசிஐடி போலீசாரின் சைபர் குற்றப்பிரிவு போலீசாரின் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து நேற்று( செப்டம்பர்01) வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், அந்த வீடியோவை உருவாக்கிய போலி ஐடி குறித்த தகவல்களை அளிக்கும்படி மெட்டா நிறுவனத்திற்கு வேண்டுகோள் வைத்துள்ளனர். மேலும் அந்த வீடியோவை அகற்றும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விஜய் தோற்றத்தில் உருவாக்கப்பட்ட இதுபோன்ற பல ஏஐ வீடியோக்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது. இந்த வீடியோக்கள் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த வீடியோவை உருவாக்கிய குற்றவாளிகளை விரைவில் கைது செய்யவும், போலி வீடியோக்களை அகற்றவும் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதுபோன்ற மோசடி வீடியோக்களில் குறிப்பிடப்படும் தொலைபேசிஎண்களை பொது மக்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். அதில் குறிப்பிடப்படும் வாட்ஸாப் குழுக்களில் இணையவோ அல்லது அவற்றின் வாயிலாக கூறப்படும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டாம் என சிபிசிஐடி போலீசார் எச்சரித்துள்ளனர்.

ஏஐ தொழில்நுட்பம் வாயிலாக உருவாக்கப்படும் டீப் பேக் வீடியோக்களில் முதல்வர் விஜய் போன்று ஆள்மாறாட்டம் செய்து வெளியிடப்படும் போலியான பதிவுகள் குறித்து பொது மக்கள் விழிப்புடன் இருப்பதுடன்,இணைய மோசடிகளில் பொது மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Source link