கச்சத்தீவு விவகாரத்தில் வழக்குகளைக் காட்டி அப்போதைய தி.மு.க அரசை அப்போதைய ஒன்றிய அரசு மிரட்டிப் பணிய வைத்ததாகவும், கருணாநிதி நினைத்திருந்தால் கச்சத்தீவு தாரைவார்க்கப்படுவதைத் தடுத்திருக்கலாம் என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சட்டப்பேரவையில் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் பேரவையில் எதிர்க்கட்சியினர் கடும் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் விவாதத்தின்போது பேசிய அமைச்சர் நிர்மல் குமார், கலைஞர் தன் மீதான வழக்குகளுக்காகக் கண்ணை மூடிக்கொண்டு கச்சத்தீவைத் தாரை வார்த்தார். வழக்கு உள்ளிட்ட காரணங்களால் கலைஞரின் ஒப்புதலுடனேயே கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. கைவிட்டுப் போன பிறகு தீர்மானம் நிறைவேற்றி என்ன பயன்? உண்மையைச் சொன்னால் தி.மு.க.வினருக்குக் கோபம் வருகிறது; ரீல்ஸ் போடுவதற்காகப் பேசுகிறோம் என்கிறார்கள். ஆனால் நாங்கள் மக்களுக்கு செய்த துரோகத்தைத் தான் பேசுகிறோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், உங்களின் அனைத்து வழக்குகளையும் சொல்லி மிரட்டி உங்களைப் பணிய வைத்தார்கள். அந்த மிரட்டலுக்குத் தனியாக பணிந்து, யாருக்கும் தெரியாமல் நீங்களும் ஒப்புக்கொண்டுவிட்டீர்கள். தி.மு.க நினைத்திருந்தால் கச்சத்தீவு தாரைவார்க்கப்படுவதை தடுத்திருக்க முடியும். கச்சத்தீவைத் தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்தது உண்மைதான், ஆனால் அதற்கு அப்போதைய தமிழக அரசு என்ன செய்தது? 1974-இல் நாடாளுமன்றத்தில் விவாதம் வந்தபோது மாரிசாமி இதுபற்றித் தெரியாது என்றார். ராமநாதபுரம் பகுதி மக்கள் இன்று இவ்வளவு கஷ்டங்களை அனுபவிப்பதற்கு கச்சத்தீவைத் தாரை வார்த்ததே முக்கிய காரணம் என்று சாடினார்.
மேலும் வரலாற்று நிகழ்வை சுட்டிக்காட்டிய அமைச்சர், கச்சத்தீவு விவகாரம் போன்றே மேற்கு வங்கத்துக்குச் சொந்தமான பேருபாரி பகுதியை கிழக்கு பாகிஸ்தானுக்கு (தற்போதைய வங்கதேசம்) தாரைவார்க்க மத்திய அரசு முனைந்தபோது, அதற்கு அப்போதைய மேற்கு வங்க முதல்வர் பி.சி.ராய் உச்சநீதிமன்றம் வரை சென்று தடுத்து நிறுத்தினார். மத்திய அரசு கேட்டாலும், தமிழக மீனவர்கள் நலன் கருதி அப்போதைய முதல்வர் கருணாநிதி கச்சத்தீவு விவகாரத்தைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை கருணாநிதி செய்யவில்லை என்று குறிப்பிட்டார்.
தி.மு.க.வின் அனைத்து வழக்குகளையும் சொல்லி மிரட்டிப் பணிய வைத்தனர் என்றும், கலைஞரின் உத்தரவின்படியே கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்றும் அமைச்சர் பேசியதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் மொத்தமாக எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட்டதால் சட்டப்பேரவையில் பெரும் சலசலப்பும் பரபரப்பும் நிலவியது.
