தீபாவளிக்கு சொந்த ஊர் போகிறவர்கள் கவனிங்க; ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது தொடக்கம்? முழு விவரம்

தீபாவளிப் பண்டிகை நவம்பர் 8-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்குப் பயணிக்க விரும்பும் பொதுமக்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தேதிகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் பயணிகளின் கூட்ட நெரிசல் பரவலாகப் பிரியும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், முன்பதிவு செய்யும் முறைகள் மற்றும் முக்கியத் தேதிகளைப் பயணிகள் முன்கூட்டியே அறிந்து கொள்வது அவசியமாகிறது.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதால், தீபாவளிப் பண்டிகையை யொட்டி, தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்குப் பயணிக்கத் திட்டமிடும் பொதுமக்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தேதிகள் வெளியாகியுள்ளன. 

பொதுவாகப் பண்டிகை நாட்கள் வாரத்தின் இடைப்பட்ட நாட்களில் வரும்போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்படும். ஆனால், இந்த முறை பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் பயணிகள் தங்களுடைய வசதிக்கேற்ப முன்கூட்டியோ அல்லது பண்டிகைக்குப் பிறகோ விடுமுறைகளைத் திட்டமிட்டுக் கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் வழக்கமான பயணிகள் கூட்டம் பரவலாகப் பிரியும் என்பதால், முன்பதிவு டிக்கெட்டுகள் கிடைப்பதில் பெரிய சிரமம் இருக்காது எனக் கருதப்படுகிறது.

ரயில்வேயின் 60 நாட்கள் முன்பதிவு விதிகளின்படி, தினமும் காலை 8 மணிக்கு இணையம் மற்றும் கவுண்டர்களில் பயணச் சீட்டு முன்பதிவு தொடங்குகிறது. அதன்படி, தீபாவளிக்கு முந்தைய வியாழக்கிழமையான நவம்பர் 5-ஆம் தேதி பயணிக்க விரும்புவோர் செப்டம்பர் 6-ஆம் தேதியும், வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) பயணத்திற்குச் செப்டம்பர் 7-ஆம் தேதியும், சனிக்கிழமை (நவம்பர் 7) பயணத்திற்குச் செப்டம்பர் 8-ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம். 

அதேபோல், தீபாவளி அன்றைய தினமான நவம்பர் 8-ம் தேதி பயணிக்கச் செப்டம்பர் 9-ஆம் தேதியும், பண்டிகை முடிந்து ஊர் திரும்பத் திட்டமிடும் திங்கள்கிழமை (நவம்பர் 9) பயணத்திற்குச் செப்டம்பர் 10-ஆம் தேதியும், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) பயணத்திற்குச் செப்டம்பர் 11-ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். 

டிக்கெட் முன்பதிவுகள் தினமும் காலை 8:00 மணிக்கு ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மற்றும் ரயில்வே மையங்களில் தொடங்கும். பயணிகள் கடைசி நேரப் பதற்றத்தையும் தாமதத்தையும் தவிர்க்க, தங்களது அடையாள அட்டைகள் மற்றும் பயணப் பட்டியலை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக்கொண்டு காலை 8 மணிக்கே முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Source link