தமிழக சட்டமன்றத்தில் நாளை மிக முக்கியமான தனித் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, இந்தத் தனித் தீர்மானத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நாளை அவையில் முன்மொழிந்து கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார்.
தமிழகத்தின் நீண்ட காலக் கோரிக்கையான உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழை மாற்றுவது குறித்து இந்தத் தீர்மானத்தில் மிக முக்கியமாக வலியுறுத்தப்பட இருக்கிறது. அதுமட்டுமன்றி, நீதிமன்றத் தீர்ப்புகளை முழுமையாகத் தமிழ் மொழியிலேயே வழங்குவதற்கும், அதற்கான தகுந்த தொழில்நுட்ப மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகளை உருவாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தத் தனித் தீர்மானத்தின் மூலம் தமிழக அரசு கோரவுள்ளது. இதனால் நாளை அவையில் இந்தத் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
