இரண்டாவது சுற்றில் ரிபாகினா: யு.எஸ்., ஓபனில் அசத்தல்

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றுக்கு கஜகஸ்தானின் ரிபாகினா முன்னேறினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் தியா புரோடின் மோதினர். அபாரமாக ஆடிய ரிபாகினா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு முதல் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், துருக்கியின் ஜெய்னெப் சோன்மெஸ் மோதினர். இதில் கோகோ காப் 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் மடிசன் கீஸ் 7-5, 6-4 என, ரஷ்யாவின் அலினா கோர்னீவாவை வென்றார்.

மற்ற முதல் சுற்று போட்டிகளில் பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா எலா, ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, கஜகஸ்தானின் யுலியா புடின்ட்சேவா, கிரீசின் மரியா சக்காரி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

ஸ்வெரேவ் வெற்றி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், இத்தாலியின் லோரென்சோ சோனேகோ மோதினர். நான்கு மணி நேரம், 53 நிமிடம் நீடித்த போட்டியில் ஸ்வெரேவ் 6-4, 3-6, 6-7, 7-5, 6-4 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.

மற்றொரு முதல் சுற்றில் பிரான்சின் கேயல் மோன்பில்ஸ், பராகுவேயின் அடோல்போ டேனியல் வல்லேஜோ மோதினர். இதில் மோன்பில்ஸ் 2-6, 6-1, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்ற முதல் சுற்று போட்டிகளில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், இத்தாலியின் பிளாவியோ கோபோலி, லோரென்சோ முசெட்டி உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

Source link