புதுடில்லி : மத்திய அரசின் கீழ் செயல்படும் துறைகளுக்கு எதிராக கடந்தாண்டு, 70,584 ஊழல் புகார்கள் பெறப்பட்டன. இதில், வங்கி மற்றும் ரயில்வே நிர்வாகங்கள் முன்னணியில் உள்ளன.
மத்திய அரசு துறைகள் மீது பதிவாகும் புகார்கள் குறித்த அறிக்கையை மத்திய விஜிலன்ஸ் கமிஷன் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. கடந்தாண்டு பதிவான புகார்கள் குறித்த அறிக்கை சமீபத்தில் வெளியானது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு துறைகள் மீது, கடந்தாண்டு மட்டும் 70,584 லஞ்ச புகார்கள் பெறப்பட்டன. இதில், 64,905 புகார்கள் தீர்த்து வைக்கப்பட்டன. மீதமுள்ள 5,679 புகார்களில், 2,002 புகார்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக நிலுவையில் இருந்தன.
அதிகபட்சமாக வங்கிகளுக்கு எதிராக 9,933 புகார்கள் பதிவாகின. இவற்றில், 9,520 புகார்கள் தீர்த்து வைக்கப்பட்டன. மீதமுள்ள 413 புகார்களில், 52 புகார்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளன.
அடுத்ததாக, ரயில்வே துறை தொடர்பாக 9,381 புகார்கள் பெறப்பட்டன. இதில், 8,754 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 627 புகார்களில், 10 புகார்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளன.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் தொடர்பாக 6,531 புகார்கள் குவிந்தன. டில்லி தேசிய தலைநகர் பிராந்திய அரசு தவிர்த்த பிற உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பாக 4,834 புகார்கள் பெறப்பட்டன.
நிலக்கரி துறை ஊழியர்கள் தொடர்பாக கடந்தாண்டு 4,118 புகார்களும், நிதித் துறை பணியாளர்களுக்கு எதிராக 3,107 புகார்களும் பெறப்பட்டன. டில்லி அரசுக்கு எதிராக 2,804, பெட்ரோலிய அமைச்சகத்துக்கு எதிராக 2,722 புகார்கள் பெறப்பட்டன.
டில்லி போலீசாருக்கு எதிராக 2,633; சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு எதிராக 2,139; டில்லி போலீஸ் தவிர்த்து உள்துறை அமைச்சகம் தொடர்பாக 2,036 புகார்களும் பெறப்பட்டன.
மனிதவள மேம்பாட்டு துறைக்கு எதிராக 2,030; தொழிலாளர் நல அமைச்சகத்துக்கு எதிராக 1,894; காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக 1,536; தொலைத்தொடர்பு துறைக்கு எதிராக 1,469 புகார்கள் பதிவாகின. ராணுவ அமைச்சகம் தொடர்பாக 1,410; நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகத்துக்கு எதிராக 1,123; எக்கு துறை தொடர்பாக 1,023; அஞ்சல் துறைக்கு எதிராக 1,003 புகார்கள் பெறப்பட்டன.
ஊழல் தொடர்பான புகார்கள் மீது மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலுவையில் உள்ள புகார்கள் விரைவில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
