கடமையை செய்ய தவறிய அதிகாரிகள் மீது விசாரணை கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடமையை செய்யாமல் அலட்சியமாக இருந்த, வருவாய் துறை, காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, ராணிப்பேட்டை கலெக்டர், எஸ்.பி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை போரூரை சேர்ந்தவர் பார்வதி. இவருக்கு ராணிப்பேட்டை மாவட்டம், கலவாய் கிராமத்தில், 13 சென்ட் நிலம் உள்ளது. அதை அளவீடு செய்ய கோரி, ராணிப்பேட்டை தாசில்தாரிடம் விண்ணப்பித்தார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், கடந்த ஜூலை 13ல், காவலர் ஒருவருடன், வருவாய், நில அளவைத்துறை அதிகாரிகள், பார்வதியின் நிலத்தை அளவிட சென்றனர்.

அதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்ததால், நில அளவிடும் பணியை, அதிகாரிகள் பாதியிலேயே கை விட்டனர்.

இதையடுத்து, தன் விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பார்வதி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவு:

அப்பகுதியை சேர்ந்த ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார் என்பதற்காக, நில அளவீடு செய்ய, அதிகாரிகள் தவறியுள்ளனர்.

வழக்கில் தொடர்புடைய தாசில்தார், தலைமை நில அளவையாளர் ஆகியோர், தங்கள் கடமையை செய்ய தவறி விட்டனர்.

சம்பந்தப்பட்ட நபருடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டனரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கடமையை செய்யாமல், அலட்சிய போக்குடன் நடந்து கொண்ட, அரசு ஊழியர்கள் மீது, விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கையை, கலெக்டர் மற்றும் எஸ்.பி., எடுக்க வேண்டும். போதிய போலீஸ் பாதுகாப்புடன், ஒரு வாரத்திற்குள் நில அளவை பணியை முடிக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Source link