திருச்சி: ”பிரதமர் பதவி தங்களுக்குத்தான் என அடித்துக் கொள்ளும் காங்கிரசாரும், த.வெ.க.,வினரும் தமிழக மக்களுக்கு நல்லது செய்வார்களா,” என, பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந் திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி மாவட்டம், சமய புரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மேட்டூர் அணையில் நீர் திறக்க, முதல்வர் விஜய் சென்ற நிகழ்ச்சிக்கு, ஐந்து கோடி ரூபாய் செலவு செய் துள்ளனர். மேட்டூர் அணையை கட்டுவதற்கே, நான்கு கோடி ரூபாய் தான் செலவானது. ‘காஸ்ட்லி’ முதல்வராக விஜய் செயல்படுகிறார்.
கடந்த ஜூன் 12ஆம் தேதி திறந்திருக்க வேண்டிய மேட்டூர் அணையை, உரிய நேரத்தில் திறக்காமல், 2 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பயிரிடாமல் பாழாகி கிடக்கிறது. காவிரி நீரை திறக்க கோரி, கர்நாடகா அரசிடம் இதுவரை ஒரு வார்த்தை கூட முதல்வர் விஜய் பேசவில்லை. கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ், தமிழகத்தில் த.வெ.க.,வுடன் கூட்டணியில் இருக்கிறது. எனினும், நமக்கான பங்கு நீரை பெறுவதில், விஜய் மவுனம் காப்பது ஏன்?
காங்கிரசாரும் த.வெ.க.,வினரும், பிரதமர் பதவி தங்களுக்குத்தான் என இப்போதே அடித்துக் கொள்கின்றனர். பதவியை ராஜினாமா செய்யப் போவதாக காங்., அமைச்சர் மிரட்டுகிறார். இவர்கள் எப்படி தமிழக மக்களுக்கு நல்லது செய்யப் போகின்றனர்?
சட்டசபை நடவடிக்கைகளை நேரலையில் பார்த்து மக்கள் ரசிப்பதாக த.வெ.க., நினைக்கிறது. ஆனால், அவையில் த.வெ.க.,வினர் நடந்து கொள்ளும் விதத்தை, மக்கள் கவனிக்கின்றனர். இதன் விளைவு வரும் நாட்களில் மோசமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
