ராகுல் பொதுமேடைகளில் பேசும் பேச்சுக்களில் 80% வரை பொய்களே.. : அந்துமணி பதில்கள்

ஏ.யோகா, கலிங்கியம்:

‘கடந்த, 10 ஆண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்திலேயே, தேடி வந்த பிரதமர் பதவியை, ராகுல் ஏற்க மறுத்தார். தற்போது தேசத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில், அவர் நாட்டின் தலைவராக முன்னிறுத்தப்படுகிறார்’ என, காங்., – எம்.பி.,க்கள் சசிகாந்த் செந்திலும், சுதா ராமகிருஷ்ணனும் கூறுகின்றனரே?

ராகுல், பொதுமேடைகளில் பேசும் பேச்சுக்களில், 80 சதவீதம் வரை, பொய்களே என்பது மக்களுக்கு மிக நன்றாக தெரியும். தமிழகத்தைச் சேர்ந்த சசிகாந்த், சுதா மற்றும் இன்ன பிற காங்கிரசாரின், ‘ஹீரோ ஒர்ஷிப்’ பெல்லாம், தமிழகத்துடன் நிற்க வேண்டிய நிலை தான் இப்போது!

அ.செல்வசுந்தரி, புதுக்கோட்டை:

மணி, தினமலர் நாளிதழில் கேள்வி – பதில் வெளியிடத் துவங்கிய மறுநாளிலிருந்து, அன்றைய நாளிதழில் இடம் பெறும் செய்திகள் சிலவற்றுக்கு, நீங்கள் பதில் கூறுவது எப்படி?

நம் வாசகர்களான முதலாளிகள், உஷாராக, சுறுசுறுப்பாக, அன்றைய நிகழ்வுகள் பற்றிய கேள்விகளை, அன்று மாலையிலேயே எனக்கு இ – மெயில் மூலம் அனுப்பி விடுகின்றனர்! அதனால் தான், ‘டாண் டாண்’ என்று உடனுக்குடன் பதில் அளிக்க முடிகிறது!

எம்.வடுகநாதன், நாகை:

‘லோக்சபாவுடன் ஒப்பிடுகையில், தமிழக சட்டசபை சிறப்பாக செயல்படுகிறது. இங்கு, முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்கள், மற்ற உறுப்பினர்கள் பேசுகின்றனர்’ என, காங்.,கின் ப.சிதம்பரம் கூறுவது சரியா?

லோக்சபாவில், எதிர்க்கட்சியான காங்கிரஸ், சபையை நடத்த விடாமல் பார்த்துக்கொள்கிறது; தமிழகத்தில் அமைச்சரவையில் பங்கு பெற்று விட்டதாலும்; பெரிய அளவில் பேசும் அளவுக்கு, சொந்த கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இல்லை என்பதாலும், ‘கப்சிப்’ என அமர்ந்து விட்டது; அவ்வளவு தான் வித்தியாசம். இந்த விஷயம் யாருக்கும் தெரியாது என நினைத்து, ‘அடித்து’ விடுகிறார் ப.சிதம்பரம்!

கி.பாலமுருகன், ராமநாதபுரம்:

அரசு பள்ளிகளில், ஏ.ஐ., மற்றும் ரோபோடிக்ஸ் எனப்படும் கணினி கல்வி அறிமுகப்படுத்தப்படும் என, அமைச்சர் குமார் அறிவித்துள்ளாரே?

அடுத்த, 20 ஆண்டுகளுக்கு, ஏ.ஐ., தொழில்நுட்பம் தான், நம் நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் பயன்படப் போகிறது. அதற்கான கல்வியை, பள்ளியிலேயே சொல்லிக் கொடுக்கும் திட்டம் மிகச் சிறந்ததே!

கி.முருகன், கரிசல்புலி:

ஒவ்வொரு மாவட்டத்திற்கும், பிரத்யேக வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அறிவித்துள்ளாரே?

அந்தந்த மாவட்டத்தில் விளையும் பொருட்கள், கிடைக்கும் கனிமங்கள் மற்றும் ஏற்கனவே செயல்படும் நிறுவனங்களை கணக்கெடுத்து, அதற்கேற்ப திட்டங்களை செயல்படுத்தினால், பலருக்கும் வேலைவாய்ப்பும், தொழில்வாய்ப்பும் கிடைக்கும். தமிழகம் மேலும் முன்னேற்றமடையும்.

என்.ஜெ.அமீன், மதுரை:

விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள அதிநவீன ஆழ்கடல் மீட்பு மற்றும் ‘டைவிங்’ உபயோகத்துக்கான, ‘ஐ.என்.எஸ்., நிபுண்’ கப்பல், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது பற்றி?

இந்திய கடற்படைக்கு மேலும் ஒரு பிளஸ் இது. பகை நாடுகளின், கடலுக்கடியிலான சதித் திட்டங்களை கண்காணிக்கவும், இயற்கைப் பேரிடர்களை கண்டறியவும், இடர் ஏற்பட்டால் மிக அதிக அளவில் பயன்படவும் இந்த கப்பலால் முடியும்!

Source link