நியூயார்க்: உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தொடர்வதாக, நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வட கரோலினா மாநிலம் ஆஷவில்லேவில் நடைபெற்ற ஜி20 நிதியமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டதை பிறகு, நியூயார்க் சென்ற அவர், நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் பேங்க் ஆப் அமெரிக்கா இணைந்து ஏற்பாடு செய்திருந்த உயர்மட்ட முதலீட்டாளர்கள் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
அந்த மாநாட்டில் அவர் பேசியதாவது; திவால் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம் இந்தியா சிறந்த ஒழுங்குமுறை உறுதியையும், வணிகச் சூழலையும் வழங்கியுள்ளது. இது ஆவணங்கள் சார்ந்தப் பணிகளைக் குறைத்து, நிறுவனங்கள் எளிமையாக செயல்பட பெரிதும் உதவுகிறது.
மூலதனச் சொத்துக்களை உருவாக்குதல், விமான போக்குவரத்து உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாடுகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு மையங்களை ஊக்குவித்தல், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் வங்கிகளின் வாராக் கடன்களை குறைத்தல் ஆகியவை அரசின் முக்கிய கவனமாக உள்ளன.
கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் சர்வதேச பொருளாதாரம் பெரும் சவால்களை சந்தித்து வந்த போதிலும், நிதி ஒழுக்கத்தை முறையாக கடைபிடிப்பதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறது. உலகளாவிய சவால்கள் மற்றும் தடைகளை மீறி, 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியா 7.8 சதவீத குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாகத் தொடர்கிறது, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
