திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் நடக்க இருக்கும் பதிவாளருக்கான நேர்காணலில், திட்டமிட்டு குறிப்பிட்ட ஒருவரை நியமிக்கவே சிலர் மறைமுகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காந்திகிராம் பல்கலைக்கழத்திற்கு, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட பதிவாளர் பதவிக்கான நேர்காணல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று 03/09/2026 நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் டிபார்ட்மெண்ட் ஆப் பெடகாலஜிக்கல் சயின்ஸில் துறைத் தலைவராக இருக்கும் பி.சி.நாகசுப்பிரமணி இப்பதவிக்காக விண்ணப்பித்துள்ளார். இவருக்கே பதிவாளர் பதவி கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
காந்திகிராம் பல்கலைகழகத்தின் தற்போதைய துணைவேந்தராக இருக்கும் ந.பஞ்சநதம் இதற்கான பணிகளை திட்டமிட்டு செய்துவருகிறார். இவர் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக 2019- 2022 ஆம் ஆண்டு பணியாற்றுகிற பொழுதிலிருந்து நாகசுப்பிரமணியனுடன் நெருங்கிய நண்பராக இருந்துவந்துள்ளனர். இந்த நிலையில் வெறும் கண்துடைப்பிற்காகவே இந்த நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில், தகுதியுள்ளவர்களை விரட்டிவிட்டு தகுதியற்ற குறிப்பிட்ட ஒருவரை இந்த பதவிக்கு நியமிக்க திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், இந்த நாகசுப்பிரமணி மீது, கடந்த ஆட்சிகாலத்தில் உயர்கல்வி அமைச்சராக இருந்த கோவி.செழியன் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த பரிந்துரைத்த நிலையில், அது சம்பந்தமாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அதே போல 2025 ஆம் ஆண்டு உயர்கல்வித் துறையே, நாகசுப்ரமணியத்திற்கு போலி அனுபவ சான்றிதழ் சமர்ப்பித்தல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அது நிரூபிக்கப்பட்டு அதற்கான அறிக்கையினை தமிழக அரசுக்கு சமர்ப்பித்தாகிவிட்டது.
நாகசுப்பிரமணி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பொறுப்பு பதிவாளராக இருந்த பொழுது ஒரு மாணவனையும், பேராசிரியரையும் சாதி ரீதியாக திட்டியதாக இவர் மீது தமிழ்நாடு மாநில எஸ்.சி/எஸ்.டி ஆணையத்தில் விசாரணையும் நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இவர் பொறுப்புப் பதிவாளராக இருந்த பொழுது பல கல்லூரிகளில் இலஞ்சம் பெற்றுள்ளதாக ஜி.O203 இன் படி விசாரணை மேற்கொண்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
அது போக தற்போது ராமகிருஷ்ணன் என்பவர் நாகசுப்பிரமணியினுடைய கல்வித் தகுதியான எம்.எட்.டெக் செல்லாது என்று ஆர்டிஐ மூலம் நிரூபித்து, ஆளுநர் அவர்களுக்கு புகார் அளித்தார். இதையடுத்து, பல்கலைக்கழகப் பதிவாளர் நாகசுப்ரமணியின் கல்வி தகுதியினை விசாரிக்க, உயர்கல்வித் துறை கடந்த ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் குழு அமைக்க ஆணை பிறப்பித்துள்ளது.
இப்படி நாகசுப்பிரமணி,பேராசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி உடையவர் அல்ல என்பது அன்றைய ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களும் கல்லூரி கல்வித்துறை இயக்குனருமான ஈஸ்வரமூர்த்தி மறுத்த பொழுதிலும், அன்றைய துணைவேந்தராக இருந்த பஞ்சநதம் தனது நெருங்கிய நண்பரான நாகசுப்பிரமணியத்திற்கு பேராசிரியர் பதவி உயர்வை அளித்தார்.
அதே போல, தற்போதும் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் தற்போதைய துணைவேந்தராக உள்ள பஞ்சனத்திற்கு நாகசுப்பிரமணியத்தினுடைய அனைத்து விவரங்களும் தெரிந்து இருந்தும் பதிவாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலில் இவர் பெயரை எப்படி சேர்த்ததுள்ளார்? இந்த தகவல் யாருக்கும் தெரிந்தால் சிக்கலை உண்டாக்கும் என்றே விண்ணப்ப எண்களோடு பெயர்களை வெளியிடவில்லையா?, நேரமுகத்தேர்வில் வெளிப்படைத்தன்மையும் இல்லை. மூடி மறைத்து அவருடைய நண்பருக்கு பதவி வழங்கினால், இதனையே நம்பிவந்த பேராசியர்களின் கனவு கேள்விகுறிதான். ஆகையால் தகுதியே இல்லாத அவருக்கு பதவி வழங்கினால் நிச்சியம் பேராசியர்கள் அனைவரும் சேர்ந்து வழக்கு தொடுப்பதாகவும் நேர்முக தேர்வுக்கு முன்பே கொந்தளித்துள்ளனர். என்ன செய்ய போகிறது மத்தியரசு!
