அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் விஜய், விதி எண் 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பிற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்லும் வகையில் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும். இந்த ஒலிம்பிக் நகரம், ஒலிம்பிக் தரத்திலான விளையாட்டு வளாகமாக உருவாக்கப்படும். இதில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள், அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தர செயற்திறன் பயிற்சி மையம், விளையாட்டு அறிவியல், விளையாட்டு மருத்துவ மையங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.
இந்த வளாகம் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு, ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லக்கூடிய திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு உதவும் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த விளையாட்டு மையமாக திகழும். இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர உற்பத்தியில் தமிழ்நாட்டு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. பல்வேறு வாகன உற்பத்திகள் தங்களது புதிய வாகன தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கு தமிழ்நாட்டை முதன்மை விருப்பமாக கருதுகின்றனர். இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு ஒரு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் உற்பத்தி பிரிவுகள் கோயம்புத்தூரில் இயங்கி வருகிறது. மெட்ராஸ் இண்டர்நேஷனல் சர்க்யூட் சென்னைக்கு அருகில் இருங்காட்டுகோட்டையிலும், கரி மோட்டார் ஸ்பீடு வே கோயம்புத்தூரிலும் மோட்டார் பந்தயந்துக்கான கட்டமைப்புகளாக உள்ளன. இந்த பந்தய அரங்குகளில் தேசிய அளவில் எஃப்-3, எஃப்-4 கார் பந்தய போட்டி நடைபெறுகிறது.
தற்போது மோட்டார் வாகன பந்தயத்திலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் உலக அளவிலான மோட்டார் வாகன கார் பந்தய விளையாட்டு போட்டிகளுக்கான கார் உற்பத்தி ஆலைகளையும் அதற்கு தேவையான உபத்தொழிற்சாலைகளையும் அமைக்க தேவையான சூழல் உள்ளது. உலகத்தரம் வாய்ந்த மோட்டார் வாகன கார் பந்தய அரங்குகளை அமைப்பதன் மூலம் சுற்றுலா, சிறப்பு வாகன தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், பொருளாதார வாய்ப்பு மேம்பட வாய்ப்புள்ளது. விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும், தமிழ்நாட்டு இளைஞர்களிடையே மோட்டார் ஸ்பீட் மீதான ஆர்வத்தையும் ஊக்குவித்து அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, தமிழ்நாட்டை சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்பீட்ஸின் முக்கிய மையமாக உருவாக்கவும், தமிழ்நாட்டில் ஒரு புதிய மோட்டார் ஸ்பீட்ஸ் நகரம் உருவாக்கப்படும். இந்த நகரத்தில் சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்பீட்ஸ் பந்தய தடம் மற்றும் அதற்கான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும். எஃப்-1, எஃப்-1, எஃப்-3, எஃப்-4 போன்ற சர்வதேச தரத்திலான போட்டிகள் நடத்துவதற்கான கட்டமைப்பு உருவாக்கப்படும். இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட் திறனை கண்டறிந்து பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகள் வழங்கி தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்களை உருவாக்குவதுடன் விளையாட்டு சுற்றுலாவின் மேம்படுத்தும் வகையில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமையும்” என அறிவித்தார்.
