வெப் தொடராக 3 சீசன்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற மிர்சாபூர் தொடர் தற்போது திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பெரும் சாதனையாக மாறியுள்ளது.
ஒ.டி.டி தளங்களின் வளர்ச்சி, அதிகமாக வெப் தொடர்களை உருவாக்கும் எண்ணத்தை தயாரிப்பாளர்களுக்கு விதைத்துள்ளது, அந்த வகையில் வெளியாக ஒரு வெப் தொடர் தான் மிர்சாபூர். பிரைம் வீடியோ தளத்தில் 3 சீசன்களாக வெளியான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. பங்கஜ் திரிபாதி, அலி ஃபாசில் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த வெப் தொடர் 3 சீசன்களாக வெளியானது. முதல் சீசன் 2018, 2-வது சீசன் 2020 மற்றும் 3-வது சீசன் 2024-ம் ஆண்டு வெளியானது.
தற்போது மிர்சாபூர் வெப் தொடர் திரைப்படமாக உருவாக்கியுள்ளது, வெப் தொடரில் நடித்த பங்கஜ் திரிபாதி, அலி ஃபாசில் ஆகியோருடன், ரவி கிஷான், ஜித்தேந்தர் குமார், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் செப்டம்பர் 4-ந் தேதி (நாளை) வெளியாக உள்ளது. படத்திற்கான முன்பதிவு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, அகமதாபாத் போன்ற முக்கிய நகரங்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் சாதாரணக் காட்சிகளுக்கு டிக்கெட் கட்டணம் 149 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நொய்டாவில் உள்ள ‘டிஎல்எஃப் மால் ஆஃப் இந்தியா’வில் (DLF Mall of India) இரவு நேரக் காட்சிக்கான டிக்கெட் விலை அதிகபட்சமாக 1,800 ரூபாய் வரை உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இது குறித்து வணிகக் கணிப்பு அமைப்பான ‘சாக்னில்க்’ (Sacnilk) வெளியிட்ட தகவலின்படி, இத்திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 15 முதல் 20 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
பீகாரில் நடைபெற்ற இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் அலி ஃபாசில், ரசிகர்கள் திரைப்படத்தின் கதையைப் புரிந்துகொள்ள முந்தைய 3 சீசன்களையும் முழுமையாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் சீசனின் 1 முதல் 6 எபிசோடுகள் மட்டும் பார்த்தால் போதும். அங்கிருந்துதான் இந்தத் திரைப்படத்தின் கதைக்களம் தொடங்குகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
குர்மீத் சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் உத்தரப் பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் துடிக்கும் குட்டு பையாவின் நடவடிக்கைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. 2018-இல் இணையத் தொடராகத் தொடங்கி பெரும் வரவேற்பைப் பெற்ற மிர்சாபூர், தற்போது பெரிய திரையில் ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரவுள்ளது. வெப் தொடராக வெற்றி பெற்ற இந்த படம் தற்போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,
