8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு!. பைக் டாக்ஸிக்கு பச்சைக்கொடி!. மாநிலங்களுக்கு அழைப்பு விடுத்த நிதின் கட்கரி! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

தனியார் இருசக்கர வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை ‘பைக் டாக்ஸி’யாக இயக்க மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

பைக் டாக்ஸி சேவைகளை ஊக்குவிப்பதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 8 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் கிடைக்கும் என்றும், குறிப்பாக கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்த மக்களுக்கு இது கூடுதல் வருமானத்தை ஈட்டித் தரும் என்றும் அமைச்சர் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு இதற்கு அனுமதி அளித்திருந்தாலும், போக்குவரத்து என்பது மாநிலப் பட்டியலின் கீழ் வருவதால், பைக் டாக்ஸிகளை அனுமதிப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கும். இதனால் அனுமதிக்கான நடைமுறைகள், காப்பீடு மற்றும் கட்டுப்பாடுகள் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளதாகக் கூறிய அவர், போக்குவரத்து விதிகளைத் தொடர்ந்து மீறுபவர்களுக்கு ‘நெகட்டிவ் பாயிண்ட்ஸ்’ வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றார். குறிப்பிட்ட புள்ளிகளை தாண்டும் போது ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம்.

மேலும், நெடுஞ்சாலை மற்றும் சுரங்கப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்கள், கட்டுமானத் தொழிலாளர்களின் நலனுக்காக “சுரக்ஷா” என்ற புதிய முன்னோடித் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக மகாராஷ்டிராவின் நாக்பூர் – காம்ப்டி (NH-44) மற்றும் சந்திரபூர் சுரங்கப் பகுதிகளில் 150 கி.மீ தொலைவுக்குட்பட்ட 10,000 தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் கண்கள் சார்ந்த சிகிச்சைகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர்களின் ஆரோக்கியம், குறிப்பாக பார்வைத்திறன் சாலைப் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Source link