மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள தஹிபாலே குடும்பத்தில், நான்கு தலைமுறைகளுக்குப் பிறகு முதல் முறையாகப் பெண்குழந்தை பிறந்துள்ளதை அந்த குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர்.
சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த குடும்பத்தில் பிறந்துள்ள முதல் பெண் குழந்தைக்கு அவர்கள் ’கார்கி’ எனப் பெயரிட்டுள்ளனர். பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக, மருத்துவமனையில் இருந்து தாயும் சேயும் வீடு திரும்பியபோது, அவர்களை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சாரட்டில் (தேரில்) வாத்தியங்கள் முழங்க, நடனத்துடன் உறவினர்கள் புடை சூழ ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கார்கியின் தாத்தா கூறுகையில், ”ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறப்பது என்பது அதிர்ஷ்டம். பல தலைமுறைகளாக எங்கள் குடும்பத்தில் பெண் குழந்தை இல்லாமல் இருந்தது. தற்போது அந்த குறை நீங்கியுள்ளது” என்றார். கார்கியின் பாட்டி சுரேகா தஹிபாலே கூறுகையில், ”இன்று எங்கள் வீட்டிற்கு மகாலட்சுமி வந்திருக்கிறாள் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்தார்.
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இன்றளவும் பாலின பாகுபாடு, பெண் குழந்தைகளைக் குறைத்து மதிப்பிடுதல் போன்ற மோசமான சூழல் நிலவி வரும் நிலையில், இது போன்ற கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு வீட்டில் பெண் குழந்தை பிறந்திருப்பதை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து பலரும் தங்களது மகிழ்ச்சியான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
