புதுடில்லி: சட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்திய பார் கவுன்சில் மற்றும் மாநில பார் கவுன்சிலுக்கும் அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், நல்சார் சட்டப் பல்கலை செயல்படுகிறது. இந்த பல்கலையின் பட்டமளிப்பு விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பங்கேற்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
மனு தாக்கல்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பல்கலை மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ‘இந்த போராட்டம் குறித்த விசாரணை முடியும் வரை, 2026ல் தேர்ச்சி பெறும் எந்தவொரு மாணவரையும் மாநில பார் கவுன்சில்கள் வழக்கறிஞராக பதிவு செய்யக் கூடாது’ என, இந்திய பார் கவுன்சில் சுற்றறிக்கை வெளியிட்டது.இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, சுற்றறிக்கையை சில மணி நேரங்களிலேயே பார் கவுன்சில் திரும்ப பெற்றது.
இந்திய பார் கவுன்சிலின் சுற்றறிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, மற்றும் மோகனா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் இன்று நீதிபதிகள், பிறப்பித்த உத்தரவு: சட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்திய மற்றும் மாநில பார் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை. சட்டம் படித்த மாணவர், வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்ட பின்னரே, அவர் மீது பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கிடைக்கிறது.
சட்ட மாணவர்களை பொறுத்தவரை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவர்களின் கல்வி நிறுவனமோ அல்லது அந்த நிறுவனத்தின் விதிகள் மற்றும் துணை விதிகளின் கீழ் நியமிக்கப்பட்ட தகுதி வாய்ந்த அதிகாரியிடமோ உள்ளது. இவ்வாறு அந்த நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
