கணவனும் மனைவியும் எப்போதும் ஒன்றாகவே சேர்ந்து வாழ வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும், வோடஃபோன் விளம்பரத்தில் வரும் ‘பக்’ (pug) நாய்க்குட்டியைப் போல மனைவி எப்போதும் கணவனைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளது. இதனுடன், பிரிந்து வாழும் தம்பதியரின் விவாகரத்து மனுவை நிராகரித்த குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, 16 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த அவர்களின் திருமண வாழ்க்கையை ரத்து செய்து உத்தரவிட்டது.
“குடும்ப நீதிமன்றத்தின் இந்த புரட்சிகரமான அணுகுமுறையை தீவிர பெண்னியவாதிகள் பாராட்டக்கூடும். ஆனால் வருத்தத்துடன் கூறுகிறோம், எங்களால் இதற்கு ஒப்புதல் அளிக்க முடியாது. மனைவியை எப்போதும் கூடவே அழைத்துச் செல்வது சாத்தியமில்லாமல் போகலாம். உதாரணத்திற்கு, கணவன் ஒரு ராணுவ வீரராக இருந்தால், ராணுவ முகாம்களில் குடும்பம் நடத்த முடியாது. அல்லது மனைவி ஒரு நல்ல வேலையில் இருக்கலாம். வோடஃபோன் விளம்பரத்தில் வரும் பக் நாயைப் போல மனைவியின் நடத்தை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது” என்று ஆகஸ்ட் 19 அன்று உயர் நீதிமன்றம் கூறியது. இந்தத் தீர்ப்பு ஆகஸ்ட் 31 அன்று பகிரங்கமாக வெளியிடப்பட்டது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
16 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த பிறகு, அவர்களின் உறவு சரிசெய்ய முடியாத அளவுக்கு முறிந்துவிட்டது என்று குறிப்பிட்ட உயர் நீதிமன்றம், மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.7 லட்சம் வழங்குமாறு கணவருக்கு உத்தரவிட்டது. அந்தத் தொகையை டெபாசிட் செய்த பிறகே விவாகரத்து உத்தரவு அமலுக்கு வரும் என்றும் நீதிமன்றம் சேர்த்துக் கொண்டது.
வேலைக்காக வேறு இடத்திற்குச் செல்லும் கணவன், பின்னர் தனது மனைவியின் விபச்சாரத்தைக் காரணம் காட்டி விவாகரத்து கோர முடியாது என்று குடும்ப நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி அடங்கிய அமர்வு, குடும்ப நீதிமன்றம் ஒரு “புரட்சிகர அணுகுமுறையை” கையாண்டுள்ளதாகக் கடுமையாக விமர்சித்தது.
இந்தத் தம்பதியருக்கு இந்து முறைப்படி 1992 செப்டம்பர் 10 அன்று திருமணம் நடைபெற்று, நான்கு குழந்தைகள் உள்ளனர். 67 வயதான கணவர் பின்னர் வேலைக்காக மும்பை சென்று மனைவியை விட்டுப் பிரிந்து வாழத் தொடங்கினார். 16 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு தம்பதியர் தொடர்ந்து பிரிந்தே வாழ்ந்தனர்.
கணவருடன் உறவைத் தொடர மனைவி எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. “ஒரு சாதாரணக் கடிதமோ அல்லது முறைப்படி அறிவிப்போ கூட மனைவியால் அனுப்பப்படவில்லை” என்று அது குறிப்பிட்டது.
குடும்ப நீதிமன்றத்தில் நடந்தது என்ன:
2014-ஆம் ஆண்டில், கணவர் திருமணத்தை ரத்து செய்யக் கோரி குடும்ப நீதிமன்றத்தை அணுகினார். தனது மனைவி மற்றொரு நபருடன் தவறான உறவில் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இருப்பினும், கணவர் வேலைக்காக வேறு இடத்திற்குச் சென்றபோது மனைவியை விட்டுச் சென்றதால், அவர் தனது சொந்தத் தவறையே சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்று கூறி குடும்ப நீதிமன்றம் அவரது விவாகரத்து மனுவைத் தள்ளுபடி செய்தது.
“சட்டப்பூர்வமாகப் பார்த்தால், மனைவியைப் பராமரிக்க வேண்டியது கணவனின் கடமையாகும். பாலியல் ஆசையின் தூண்டுதலை யாராலும் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். எனவே, கணவன் எங்கு சென்றாலும் தன் மனைவியை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதும், விபச்சாரத்திற்கோ அல்லது விபச்சாரம் தொடர்பான வதந்திகளுக்கோ அவனே காரணமாக இருக்கக்கூடாது என்பதும் ஒவ்வொரு கணவனின் தலையாய கடமையாகும்” என்று குடும்ப நீதிமன்றம் அவதானித்திருந்தது.
குடும்ப நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து கணவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
கடுமையான கசப்புணர்வு நிலவுகிறது:
இந்து திருமணச் சட்டத்தின் கீழ், ஒரு நபர் தனது சொந்த தீவிரமான தவறான நடத்தையைப் பயன்படுத்தி விவாகரத்து பெற முடியாது என்பதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இருப்பினும், வேலைக்காக மும்பை செல்ல கணவர் எடுத்த முடிவு திருமணக் கடமையை மீறிய செயலாகும் என்ற குடும்ப நீதிமன்றத்தின் கருத்தை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
இரு தரப்பினருக்கும் இடையிலான உறவு சரிசெய்ய முடியாத அளவுக்கு முறிந்துவிட்டது என்பதில் நாங்கள் முழு திருப்தி அடைகிறோம் என்று அமர்வு குறிப்பிட்டது.
சமரசம் ஏற்படுத்த நீதிமன்றம் இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியது, ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. “பரஸ்பர குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது, இருவரிடையேயும் அதிகளவு கசப்புணர்வு நிலவுவதால், அவர்கள் மீண்டும் சேர்வதற்கான சாத்தியக்கூறுகள் கொஞ்சமும் இல்லை என்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம்” என்று அந்த உத்தரவு முடிவடைந்தது.
