சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த ஏழு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர், விவசாயக் கிணற்றில் சாக்கு மூட்டையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம், கோணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பேராக்கவுண்டர் என்பவரின் மகள் கோகில(23) இவர் தனது படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி கோகிலாவிற்குத் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன பெற்றோர்கள் அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர்.
பரிசோதனையில் அங்குள்ள மருத்துவர்கள் கோகிலா 7 மாதக் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி அதிர்ச்சியளித்தனர். இதனையடுத்து பெற்றோர்கள் கோகிலாவிடம் விசாரித்தபோது, கன்னியாம்பேட்டையைச் சேர்ந்த மாரி என்பவரின் மகன் அம்மாசி என்பவரோடு பழகி வந்ததும், அவரால்தான் தான் கர்ப்பமடைந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாகச் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அம்மாசியைக் காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், அதே ஆகஸ்ட் 20-ஆம் தேதியே கோகிலாவை அம்மாசியோடு அனுப்பி வைத்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்து சில நாட்களிலேயே, அதாவது ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலை, கோகிலா திடீரென காணாமல் போய்விட்டதாக அவரது தந்தை பேராக்கவுண்டரிடம் கணவர் அம்மாசி கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை, கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் தனது மகளைக் காணவில்லை எனப் புகார் அளித்தார். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதனிடையே, கொங்கணாபுரம் தானக்குட்டி வலவைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகமடைந்து கிணற்றை எட்டிப்பார்த்தபோது, வெள்ளை நிறச் சாக்கு பையில் ஏதோ ஒரு மூட்டை மிதப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
தீயணைப்புத் துறையினரின் உதவியோடு அந்தச் சாக்கு மூட்டை வெளியே எடுக்கப்பட்டபோது, அதற்குள் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அது காணாமல் போன 7 மாதக் கர்ப்பிணி கோகிலாதான் என்பதை அவரது உறவினர்கள் கண்ணீருடன் உறுதிப்படுத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் புத்தாலிங்கம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
கர்ப்பிணியான கோகிலா அடித்துக் கொலை செய்யப்பட்டு சாக்கில் கட்டிக் கிணற்றில் வீசப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துக் கணவர் அம்மாசி மற்றும் அவரது உறவினர்களைக் காவல் நிலையம் கொண்டு சென்று கொங்கணாபுரம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
