திமுக சட்டத்துறை செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) செயல்பாடுகள் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டல் நடைமுறைகள் (SOP) தொடர்பாக திமுக தலைவரின் சார்பில் இரு முக்கிய ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டல் நடைமுறைகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் இயங்குதளத்திலும் உள்ள தீவிரமான குறைபாடுகளைப் பொதுமக்களுக்கு முறையாக எடுத்துரைக்கவும், அவற்றைச் சட்டப்பூர்வமான ஆவணங்களாகப் பதிவு செய்யவும் வேண்டியது ஜனநாயகக் கடமையாகும்.
இதன் அடிப்படையில், கழக சட்டத்துறையின் சார்பில் தலைவரிடம் இதற்கான சாதக பாதகங்களை மிகத் தெளிவாக எடுத்துரைத்து, நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு எதுவாக இருப்பினும் இந்த முன்னெடுப்பைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளின் பேரில் தலைவரின் முழு ஒப்புதலுடன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் முதலாவது மனு (WP 34884/2026), தேர்தல் ஆணையம் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டின் வழிகாட்டல் நடைமுறையானது (SOP) உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக அமைந்திருந்ததால் அதை முற்றிலும் நீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டது. இது குறிப்பிட்ட ஒரு நபருக்கான வழக்கு அல்லாமல், இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய மிக முக்கிய வழக்காக இருந்தது. இருப்பினும், 2025 ஆம் ஆண்டிற்கான புதிய வழிகாட்டல் நடைமுறைகளைத் தேர்தல் ஆணையம் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, அந்தப் புதிய நடைமுறையை எதிர்த்துத் தனியாக மனு தாக்கல் செய்யும் உரிமையைப் பாதுகாத்துக் கொண்டு அம்மனு திரும்பப் பெறப்பட்டது.
கொளத்தூர் தொகுதி EVM சரிபார்ப்பும் கண்டறியப்பட்ட பழுதுகளும்
கடந்த 2024 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின்படி, தேர்தல் முடிவுகளில் சந்தேகம் எழுப்பும் இரண்டாம் அல்லது மூன்றாம் இடம் பெற்ற வேட்பாளர்கள், 5 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான உரிய கட்டணத்தைச் செலுத்தி அவற்றின் நினைவகத்தை (Burnt Memory) சரிபார்க்க உரிமை வழங்கப்பட்டது.
இவ்வுரிமையைப் பயன்படுத்தி, கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்யுமாறு திமுக சட்டத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டு, கழகத் தலைவரின் ஒப்புதலுடன் விண்ணப்பிக்கப்பட்டது. அதன்படி, 2026 ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 5 வரை நடைபெற்ற முறையான சோதனையில் பின்வரும் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன: பரிசோதிக்கப்பட்ட 14 தேர்ந்தெடுக்கப்பட்ட இயந்திரங்களில், 5 இயந்திரங்கள் (அதாவது சுமார் 30 சதவீதம்) சரிவரச் செயல்படவில்லை அல்லது பழுதாகியிருந்தன. கழகத் தலைவரின் பெயர் இடம்பெற்ற வாக்கு செலுத்தும் அலகை (Ballot Unit) கட்டுப்பாட்டு அலகு (Control Unit) அடையாளம் காண இயலாமல் முற்றிலும் செயலிழந்தது. ஒரு குறிப்பிட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாதுகாப்பு முத்திரைகள் (Safety Seals) புதியதாகவும், முறையாக நிரப்பப்படாமலும் காணப்பட்டன.இத்தகைய தீவிரமான தொழில்நுட்பப் பழுதுகள் மற்றும் விதிமீறல்கள் குறித்து உச்ச நீதிமன்ற ஆணையின்படி தேர்தல் ஆணையம் எவ்வித முறையான விளக்கத்தையும் அளிக்கவில்லை.
சட்டச் சிக்கல்களும் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் உண்மையான பொருளும்
1951 ஆம் ஆண்டைய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 45 நாட்களுக்குள் மட்டுமே தேர்தல் வழக்கைத் தாக்கல் செய்ய இயலும். மேலும், பிரிவு 100-இல் குறிப்பிட்டுள்ள காரணங்களுக்காக மட்டுமே மனு அளிக்க முடியும்; வெறும் யூகங்களின் அடிப்படையில் தேர்தல் மனுவைத் தொடர முடியாது. ஆனால், தேர்தல் ஆணையமோ உச்ச நீதிமன்ற உத்தரவை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சோதனை செய்ய ஏறத்தாழ 3 மாத கால தாமதத்தைச் செயற்கையாக ஏற்படுத்தியது.
கொளத்தூர் தொகுதியின் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் VVPAT சீட்டுகளையும் சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டபோது, நீதிமன்றம் அதனை மனுவின் “ஏற்புடைமை” (Maintainability) என்ற தொழில்நுட்பக் காரணத்திற்காக மட்டுமே தள்ளுபடி செய்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 329(b) பிரிவின்படி, தேர்தல் வழக்கின் மூலமாக மட்டுமே ஒரு தேர்தலைச் செல்லாது என்றோ அல்லது மற்றொரு வேட்பாளரை வெற்றி பெற்றவராகவோ அறிவிக்க முடியும் என்பதே நீதிமன்றத்தின் நிலைப்பாடாகும்.
அதேவேளையில், உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது:
சரிபார்ப்பு நடைமுறைக்கு எதிராக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளின் தகுதி குறித்தோ அல்லது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் சரியான தன்மை குறித்தோ நீதிமன்றம் எவ்விதக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. VVPAT கருவிகளின் செயலிழப்பு, விதி 49-T மீறல் மற்றும் வாக்குச்சாவடி எண் 208-இல் வாக்குப் பதிவு அலகு கண்டறியப்படாதது ஆகியவை உள்ளிட்ட அனைத்துத் தகுதி சார்ந்த வாதங்களையும் உரிய சட்ட மன்றத்தின் முன் எடுத்துரைத்துத் தீர்வு காண மனுதாரருக்கு முழு உரிமையும் அனுமதியும் வழங்கப்படுகிறது.
வரலாற்றுப் படிப்பினையும் எதிர்காலச் சட்டப் போராட்டமும்
முற்காலத்தில் நீதிக்கட்சி கொண்டு வந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையை தொடக்கத்தில் சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், தளராத தொடர் சட்டப் போராட்டங்களும் மக்கள் இயக்கங்களுமே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதலாவது திருத்தம் கொண்டுவரப்பட்டு இடஒதுக்கீடு பாதுகாப்பைப் பெறக் காரணமாக அமைந்தன.
அதேபோன்று, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் இத்தகைய வழக்குத் தொடரப்பட்டது இதுவே முதல்முறையாகும். வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள், தேர்தல் முடிவுக்குப் பின் அவற்றைச் பரிசோதிக்கும் முறைகள் மற்றும் சோதனையில் தவறுகள் கண்டறியப்பட்டால் அதற்கான பரிகாரங்கள் ஆகியவற்றுக்குத் தெளிவான சட்டப்பூர்வ விடைகள் கிடைக்க வேண்டியது ஜனநாயகத்தின் அவசியமாகும்.
“I MAY BE WRONG, BUT I AM CLEAR” (நான் தவறாக இருக்கலாம், ஆனால் தெளிவோடு இருக்கிறேன்) என்ற ஆங்கிலப் பொன்மொழிக்கு ஏற்ப, கொளத்தூர் தொகுதியின் தேர்தல் முடிவுகள் வாக்குப்பதிவு இயந்திரங்களின் கோளாறுகளினாலேயே மாறியது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சட்டமும் நீதியும் மக்களாட்சியின் மாண்பைக் காக்க நிச்சயம் நல்வழியைக் காட்டும் என்ற நம்பிக்கை நமக்கு உறுதியாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
