இந்த விவகாரம் வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் மனியர் பகுதிக்குட்பட்ட ரானிபூர் கிராமத்தில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது, சிறுமிக்கு அரசு சார்பில் ஊன்றுகோல்கள், மூன்று சக்கர வாகனம் (ட்ரைசைக்கிள்), புத்தகங்கள், பள்ளிப் பை மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறுமியின் காலிற்கான மருத்துவச் சிகிச்சை மற்றும் சாலை வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்து தரவும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமி ராகினிக்கு ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் ஒரு கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இருப்பினும், குடும்ப வறுமையின் காரணமாகச் சிறுமிக்கு முறையான மருத்துவம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், அந்த காலை குணப்படுத்த முடியாமல் போனது. எனவே, அந்த கால் செயலிழந்ததைத் தொடர்ந்து, சிறுமி ஒரே காலில் குதித்தவாறே பள்ளிக்குச் சென்று வருகிறார். இந்நிலையில், அரசு சார்பில் அவருக்கு உதவி வழங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
