கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் 11வது நாளில், தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் ராஜ்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதாவது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும், 2012-ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பணப் பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் 10-வது நாளில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்ற நிலையில், 11-வது நாளான வியாழக்கிழமையும் போராட்டம் தொடர்ந்தது.
இதில் இந்திய மாணவர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் நந்தினி தலையில் இணைச் செயலாளர்கள் செங்கதிர், சிவன்ராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் விமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர். இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் அமைச்சர் ராஜ்குமார் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வரும் செவ்வாய்க்கிழமைக்குள் நிறைவேற்றப்பட உள்ள கோரிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
மேலும், ஓய்வூதியம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உத்தரவாதம் அளித்தார். இதனிடையே, பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர், அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். அறிவிப்பு வெளியான பின்னர் கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
