“தவெக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து அவர் இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, அதிமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே அவரது கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்திருந்தார்.

அதே சமயம் கருப்பையாவின் பேச்சு ஜல்லிக்கட்டை புண்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பும் விதத்திலும், இழிவுபடுத்தும் வகையிலும் இருப்பதாகக் கூறி, அவருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வாடிவாசல் அருகே, மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் இன்று (03.09.2026 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ, முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டு, அங்கு நிறுத்தப்பட்டிருந்தன. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, “காப்போம்… காப்போம்… ஜல்லிக்கட்டு உரிமையை காப்போம்! வெல்க… வெல்க… வெல்கவே… ஜல்லிக்கட்டு உரிமைப் போராட்டம் வெல்கவே!” என அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், “கருப்பையா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் விஜய் இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல; அது தமிழர்களின் நாகரிகம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடைய வீர விளையாட்டு ஆகும். எனவே இதுகுறித்து சட்டப்பேரவையில் கருத்துகளை தெரிவிக்க அனுமதித்த தமிழக வெற்றிக் கழக அரசைக் கண்டிக்கிறோம்” என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Source link