கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆக.28ஆம் தேதி வெளியான படம் ‘ஹாய்’. காதலை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியிருந்தார். இப்படத்தை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘ரௌடி பிக்சர்ஸ்’ இணைந்து தயாரித்திருந்தது. ஜென் மார்டின் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராதிகா சரத்குமார் பேசுகையில், “முதலில் ‘ஹாய்’ படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்றைய சூழலில் ஒரு படம் வெற்றிகரமாக ஓடுவது என்பது மிகவும் சவாலான விஷயம். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்தப் படத்தை உருவாக்கி, ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெற்றிருக்கும் படக்குழுவினருக்கு என் பாராட்டுகள். இயக்குநர் விஷ்ணு பல சவால்களைக் கடந்து இந்த வெற்றியைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை என்றாலும், படத்தைப் பார்த்த பலரும் மிகவும் ரசித்ததாகவும், உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக இருந்ததாகவும் கூறியுள்ளனர். பாக்யராஜ் சாருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் இனிமையானது. இந்த கதைக்கு அவர் ஒரு வெர்ஷன் வைத்திருந்தார். ஒரு நாள் படப்பிடிப்பில் என்னிடம் ஒரு சீனை இப்படி வைக்கலாம் என சொன்னார். உடனே நான் இந்த படத்துக்கு நீங்கள் எதுக்கு வந்தீர்கள் எனக் கேட்டேன். உடனே அமைதியாகிவிட்டார். நகைச்சுவையாகப் பழகும் அவர், தனது அனுபவத்தின் மூலம் பல அருமையான ஆலோசனைகளையும் வழங்குவார். நிறைய திரைக்கதையாசிரியர்கள், இயக்குநர்கள் அவரை மிஸ் செய்வார்கள். அதேபோல், பிரபு சார் எனக்கு மிகவும் பிடித்த சக நடிகர். அவரது குடும்பத்தின் விருந்தோம்பலும், சினிமா மீதான அன்பும் எப்போதும் சிறப்பானது.
கவினின் ‘டாடா’ படத்தைப் பார்த்தபோதே அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக நினைத்தேன். ‘ஹாய்’ படத்தின் வெற்றிக்கும், அவரது பயணத்திற்கும் வாழ்த்துகள். விஷ்ணுவுக்கும் அவரது வெற்றிக்கும் புதிய வாழ்க்கைப் பயணத்திற்கும் வாழ்த்துகள். மேலும், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் வெற்றியில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நயன்தாரா வெளியில் மென்மையானவராகத் தோன்றினாலும், மனதளவிலும் உடல் ரீதியாகவும் மிகவும் வலிமையானவர். இந்த வெற்றிக்காக படக்குழுவினர் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.
