“வருத்தமும் வேதனையும் அடைந்தேன்” – முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், அனுப்பன்குளம் கிராமம் மற்றும் திருவில்லிபுத்தூர் வட்டம், விழுப்பனூர் கிராமம் ஆகிய பகுதிகளில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலைகளில் இன்று (3.9.2026) எதிர்பாராதவிதமாக  வெடி விபத்துகள்  ஏற்பட்டது. 

அப்போது அங்கு பணியிலிருந்த வத்திராயிருப்பு வட்டம். குன்னூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (வயது 56) என்பவரும்; சிவகாசி வட்டம், சிலோன் காலனியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 55),  என்பவரும் பலத்த காயமுற்று உயிரிழந்தனர். இந்த துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும், விழுப்பனூர் கிராமத்தில் நடந்த விபத்தில் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கானிராஜ் (வயது 49) மற்றும் லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கருப்பாயி (வயது 47), மகாலட்சுமி (வயது 36), பவானி (வயது 49) மற்றும் இருளாயி (வயது 70)  ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

 இவ்விபத்துகளில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு 1 லட்சம் ரூபாயும். லேசான காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Source link