மும்பை: மஹாராஷ்டிராவில் இதுவரை செய்தித்தாளில் வைத்து வடபாவ், பக்கோடா ஆகியவற்றை வழங்கிய கடைக்காரர்கள் , உணவு பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டே எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக அதை மாற்றி வருகின்றனர்.
மஹாராஷ்டிராவில் கடந்த சில மாதம் முன்பு வரை உணவகங்கள், நட்சத்திர விடுதிகள், சாலையோர உணவகங்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் தங்கள் இஷ்டப்படி செயல்பட்டு வந்தன. மக்களின் உடல்நலனை கருதாமல், தங்களின் வருமானத்தை மட்டும் கவனித்து வந்தன.
ஆனால், உணவு பாதுகாப்பு ஆணையராக துக்காராம் முண்டே பொறுப்பு ஏற்ற பின்பு நிலைமை மாறியது. உணவு விற்பனை நடக்கும் உணவகங்கள், கிளப்கள் என அனைத்திலும் சோதனை நடத்தத் துவங்கினார். விதிமுறைகள் பின்பற்றாத பல உணகவங்களின் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்டது. அவரின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. உணவின் தரம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால், அம்மாநிலத்தில் மாற்றங்கள் ஏற்பட துவங்கி உள்ளன. இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், துக்காராம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக உணவகங்கள் மற்றும் சாலையோர உணவு விற்பனையாளர்களும் உணவு கையாளும் முறையை கடைபிடிப்பதை விளக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
இது மட்டும் அல்லாமல், இதுவரை மஹாராஷ்டிராவின் பிரபலமான வடபாவ் மற்றும் பக்கோடா ஆகியவை பழைய செய்தித்தாள்களில் மடித்து தந்தனர். தற்போது வாழை இலை, பட்டர் பேப்பரை பயன்படுத்தத் துவங்கியது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இத்துடன் மட்டும் அல்லாமல், இதுவரை உணவுப்பொருட்களை சுவையூட்ட வேண்டும் என்பதற்காக அதிகளவு சாயங்களை பயன்படுத்திய நிலையில் தற்போது அது குறைந்துள்ளது. மச்சூரியன், சட்னி உள்ளிட்ட உணவு பொருட்கள் இயல்பான நிறத்தில் இருக்கின்றன.
மேலும் சமையல்காரர்கள்,தெருவோர உணவு விற்பனையாளர்களும் இப்போது உணவு தயாரிக்கும்போது கையுறைகளையும், தலையில் தொப்பி அணியத் துவங்கி உள்ளனர்.சமையல் செய்ய பயன்படும் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை சுத்தமாக வைத்திருப்பதை கவனம் செலுத்தத் துவங்கி உள்ளனர்.
அங்கு ஒரு தட்டை டிஷ்யூ பேப்பர் வாயிலாக துடைத்த போது, அது சுத்தமாகவும் , தூசியின்றி இருப்பதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது . மேலும், ரொட்டி, டோஸ்ட் போன்ற உள்ளூர் தயாரிப்புகளிலும் அதன் எம்ஆர்பி, பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் காலாவதிஆகும் தேதி ஆகியவையும் அதில் அச்சிடப்பட்டுள்ளதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.இத்தகைய மாற்றங்களுக்கு காரணமான துக்காராம் முண்டேவை நெட்டிசன்கள் புகழ்ந்தும், பாராட்டியும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
