நேற்று மாணவி தற்கொலை; இன்று மாணவன் தற்கொலை முயற்சி; சென்னை அருகே பொறியியல் கல்லூரியில் நடப்பது என்ன? வானதி சீனிவாசன் கேள்வி

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்றும் கல்லூரியின் மாடியிலிருந்து மாணவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பும் விதமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில் தெரிவித்திருப்பதாவது, “காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்றும் கல்லூரியின் மாடியிலிருந்து மாணவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. 

பல கனவுகளுடன் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பொருளாதாரக் கஷ்டத்திலும் படிக்க வைக்கும் சூழலில் மாணவர்கள் இதுபோன்ற தவறான முயற்சிகளில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டு எதிர்காலக் கனவுகளையும் சிதைத்து அன்பான உறவுகளையும் சோகத்தில் ஆழ்த்துவது வேதனை அளிக்கிறது.

இத்தகைய சம்பவங்களை அறியும் போது அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் கவுன்சிலிங் கமிட்டி இயங்குகிறதா அல்லது பெயரளவில் மட்டும் செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. தற்போதைய யுகத்தில் மாணவர்கள் பலவித மன அழுத்தங்களுக்கு ஆளாகும் சூழலில் அவர்களை நெறிப்படுத்தி மீட்டெடுக்கும் பணியை கவுன்சிலிங் கமிட்டி முறையாக மேற்கொண்டாலே இத்தகைய சம்பவங்கள் தடுக்கப்படும். 
மேலும் மாணவர்களும் எதற்கும் தவறான முடிவுகள் எதற்கும் தீர்வாகாது என்பதை நினைவில் கொண்டு தங்களுக்கு நேரும் இடர்பாடுகளை பெற்றோரிடத்திலும், ஆசிரியர்களிடத்திலும் கூறினாலே உங்களது பாதி மனச்சுமை குறையும். 

உங்கள் நலனில் உங்களை விட அக்கறை கொண்டவர்கள் உங்கள் பெற்றோர்கள் மட்டுமே என்பதை மனதில் நிறுத்தி எதுவாயினும் அவர்களிடம் பகிருங்கள். தமிழக அரசும் இதுபோன்ற சம்பவங்களில் அலட்சியம் காட்டாமல் பள்ளி, கல்லூரிகள் கவுன்சிலிங் கமிட்டி முறையாக இயங்குகிறதா என்பதைக் கண்காணித்து மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார். 

Source link