புதுடில்லி: இந்தியா – பெல்ஜியம் இடையே ராணுவ வீரர்களின் பரிமாற்றம், பயிற்சி உள்ளிட்ட ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பெல்ஜியம் பிரதமரை டில்லியில் சந்தித்து பேசிய பின், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர், நம் நாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்பு குறித்து பேச்சு நடத்தினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து இரு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியா – பெல்ஜியம் உறவில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கிய தூணாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ வீரர்கள் பரிமாற்றம் மற்றும் பயிற்சி ஒத்துழைப்பை அதிகரிக்க இன்று முடிவு செய்துள்ளோம்.
இரு நாட்டு ராணுவ தொழில்துறை நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தங்கள், ராணுவ தளவாடங்களை கூட்டாக உற்பத்தி செய்ய புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். இரு நாடுகளின் புலனாய்வு அமைப்புகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்தையும், குற்றங்களை தடுப்பதற்கான ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவோம்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா – பெல்ஜியம் உறவு பல்வேறு துறைகளில் விரிவடைந்துள்ளது. ராணுவ தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஜோராவர் இலகுரக பீரங்கி உள்ளிட்ட ராணுவ தளவாட திட்டங்களிலும் ஒத்துழைப்பு உள்ளது.
ஆந்திராவின் காக்கிநாடாவில் பசுமை அமோனியா உற்பத்தி நிலையம் அமைப்பது உள்ளிட்ட பொருளாதார திட்டங்களிலும் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு உள்ளது.இந்தியா – பெல்ஜியம் உறவு வரலாற்று சிறப்புமிக்கது. முதல் உலகப் போரின்போது பெல்ஜியத்தில் ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் துணிச்சலுடன் போரிட்டு உயிர்த் தியாகம் செய்தனர்.
அவர்களின் தியாகம் இரு நாடுகளின் பொதுவான நினைவில் முக்கிய இடம் பெற்றுள்ளது.தற்போது உலகம் பெரும் மாற்றங்களை சந்தித்து வருகிறது. பல பகுதிகளில் மோதல்கள் நீடிக்கின்றன. உணவு, எரிபொருள் மற்றும் விநியோக சங்கிலி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது. இந்த சவாலான சூழலிலும் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. கடந்த காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக இருந்தது.
பெல்ஜியம் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை விரைவுபடுத்துவதற்காக, ‘முதலீட்டு விரைவு நடவடிக்கை அமைப்பு’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா – பெல்ஜியம் வர்த்தக அமைப்பின் கூட்டங்களை தொடர்ந்து நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.செமிகண்டக்டர் எனப்படும் மின்னணு சிப் துறையில் பெல்ஜியத்தின் தொழில்நுட்ப திறனும், இந்தியாவின் உற்பத்தி திறனும் ஒன்றுக்கொன்று வலு சேர்க்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
