தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். அதில் குறிப்பாக, மாநிலத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய ‘ஒலிம்பிக் நகரம்’ மற்றும் ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்கப்படும் என்ற அறிவிப்பு இடம்பெற்றிருந்தது.
இந்தத் திட்டத்திற்குத் திரைத்துறை பிரபலமும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் தீவிர ஆர்வம் கொண்டவருமான நடிகர் அஜித் குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விளையாட்டுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் இந்த சிறப்பான திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்க்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது தாம் மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற பொன்மொழியை மேற்கோள் காட்டி, “தமிழ்நாடு அரசின் இந்த ஒரு சிறிய முயற்சி, இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கான மாபெரும் பாய்ச்சல்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் முதலமைச்சரின் அனைத்து முயற்சிகளும் சிறக்கத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
