புதுடில்லி: நாட்டின் வளர்ச்சியில் போக்குவரத்தை முக்கிய துாணாக மாற்றும் வகையில், வாகனத் துறை புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி தரத்தை மேம்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கமான சியாம் நடத்திய 66வது ஆண்டு மாநாட்டில் அவர் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருவதால், மக்களின் போக்குவரத்து தேவையும் அதிகரித்து வருகிறது. நெடுஞ்சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகள் வேகமாக விரிவடைவதால், பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்தை எளிதாக்கி வாகன துறைக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. மாசற்ற, நிலையான போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதில் நாம் அடைந்து வரும் முன்னேற்றத்தில், வாகனத்துறை முக்கிய பங்கேற்க வேண்டும்.
நாடு முழுதும் சார்ஜிங் வசதிகள் வேகமாக விரிவாக்கப்படுவதால் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கிறது. புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளும் உருவாகின்றன. மேலும், அடுத்த தலைமுறை போக்குவரத்தை நோக்கி பயணிக்க இவ்வமைப்பு முக்கிய பங்காற்ற வேண்டும்.
தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில் தேவையற்ற சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருவது தொழில் துறைக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. அத்துடன், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம், ‘மேக் இன் இந்தியா’ உள்ளிட்ட திட்டங்கள் வாகன உற்பத்தி திறனை வலுப்படுத்தியுள்ளன. சமீபத்திய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால் சர்வதேச சந்தைகளுக்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கட்டுப்பாடு வரும்
இந்திய வாகனத்துறை மின்சார வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை பெரிய அளவில் ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக, நான்கு சக்கர வாகனங்களில் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு மேலும் கட்டுப்பாடுகள் வர வாய்ப்புள்ளது. எனவே, மின்சார வாகனங்களுக்கான மாற்றத்தில் வாகனத்துறை அதிக கவனம் செலுத்த வேண்டும்- தருண் கபூர்பிரதமரின் ஆலோசகர்
