ஏசியன் கேம்ஸ் 2026 தொடரில், மகளிர் கிரிக்கெட் பிரிவில், 7ஆவது லீக் போட்டியில், இந்திய மகளிர் அணியும், ஹாங் ஹாங் மகளிர் அணியும் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற ஹாங்ஹாங் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஸ்மிருதி மந்தனா சதம்: முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணியில், ஓபனர் ஸ்மிருதி மந்தனா, 64 பந்துகளில் 14 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 124 ரன்களை குவித்து அசத்தினார். மேலும், ஷபாலி வர்மாவும் 28 (17) ஓரளவுக்கு அதிரடி காட்டினார். பிறகு, பிரடிகா ராவல் 10 (12), ரிச்சா கோஷ் 11 (13), கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 10 (9) ஆகியோரும் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 193/5 ரன்களை எடுத்தது.
ஹாங் ஹாங் படுதோல்வி: 194 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய ஹாங் ஹாங் அணியில், எந்த பேட்டரும் 15 ரன்களை தாண்டவில்லை. இந்திய மகளிர் அணி பௌலர்கள் தொடர்ச்சியாக அபாரமாக பந்துவீசியதால், ஹாங் ஹாங் மகளிர் அணி, 16.2 ஓவர்கள் முடிவில் 56/10 ரன்களை மட்டும் சேர்த்து, இறுதியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்தது.
தீப்தி சர்மா அபாரமாக பந்துவீசி, 3 ஓவர்களில் 9 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். நந்தினி சர்மா, ஶ்ரீ சரணி, பிரேமா ராவத் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்கள்.
இப்போட்டியில் வென்றதன் மூலம், இந்திய மகளிர் அணி, 2 போட்டிகளில் +5.775 நெட் ரன்ரேட்டில் 4 புள்ளிகளை பெற்று அரையிறுதிக்கு, முதல் அணியாக முன்னேறியுள்ளது. இதற்குமுன், முதல் லீக் போட்டியில், தாய்லாந்து மகளிர் அணிக்கு எதிராக 94 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வென்றது.
அடுத்து, செப்டம்பர் 5ஆம் தேதி பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி விளையாடும். இப்போட்டியில், பாகிஸ்தான் மகளிர் அணி படுதோல்வியை சந்தித்து, அடுத்து ஹாங் ஹாங் அணிக்கு எதிராக பாகிஸ்தான் தோற்றால், பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு, நெட் ரன்ரேட் அடிப்படையில் மட்டுமே இருக்கும். இதனால், இந்திய மகளிர் அணிக்கு எதிராக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி இருக்கிறது.
வரலாற்று சாதனை: இந்திய மகளிர் டி20 அணிக்காக, ஒரு வருடத்தில் அதிக விக்கெட்களை கைப்பற்றியோர் பட்டியலில் ஶ்ரீ சரணி, வரலாறு படைக்க உள்ளார். இதற்குமுன், 2018ஆம் ஆண்டில், பூனம் யாதவ், 35 விக்கெட்களை கைப்பற்றியதுதான் சாதனையாக இருந்தது. தற்போது, 2026ஆம் ஆண்டில், ஶ்ரீ சரணி, 31 விக்கெட்களை எடுத்து, 2ஆவது இடத்தில் இருக்கிறார். 2024, 2022 ஆகிய ஆண்டுகளில் தீப்தி சர்மா 30, 29 ஆகிய விக்கெட்களை எடுத்து, டாப் 5 பட்டியலில் இருக்கிறார். 2024ஆம் ஆண்டில், ராதா யாதவ் 29 விக்கெட்களை எடுத்து, 5ஆவது இடத்தில் உள்ளார்.
இந்திய மகளிர் டி20 அணிக்கு, ஹாங் ஹாங்கிற்கு எதிராக பெற்ற 137 ரன்கள் வித்தியாச வெற்றிதான், இரண்டாவது பெரிய வெற்றியாக இருக்கிறது. 2018ஆம் ஆண்டில், மலேசிய மகளிர் அணிக்கு எதிராக 142 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுதான் வரலாற்று சாதனையாக உள்ளது.
