பாரத ஸ்டேட் வங்கி (SBI) தன் சம்பளக் கணக்கு (Salary Package Account) வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், பிற வங்கிகளின் ஏடிஎம் (ATM) மற்றும் ஏடிடபிள்யூஎம் (ADWM) இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது வழங்கப்படும் இலவச மாதந்திர பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் திருத்தம் செய்துள்ளது. இந்த புதிய ஏடிஎம் பரிவர்த்தனை விதிமுறைகள் 2026, அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகின்றன.
அக்டோபர் 1 முதல் என்ன மாறுகிறது?
எஸ்.பி.ஐ. சம்பளக் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வகை வாடிக்கையாளர்களுக்கும், பிற வங்கி ஏடிஎம்களில் வழங்கப்படும் இலவச மாதந்திர பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 10-லிருந்து 5 ஆகக் குறைக்கப்படுகிறது. இந்த வரம்பானது பணப் பரிவர்த்தனை (Financial) மற்றும் பணம் சாராத பரிவர்த்தனை (Non-financial) என இரண்டிற்கும் பொருந்தும். நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.
இலவச பரிவர்த்தனை எல்லை முடிந்த பிறகு எவ்வளவு கட்டணம்?
பிற வங்கி ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை முடிந்த பிறகு, அதற்கான சேவைக்கட்டணம் வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து பிடிக்கப்படும். இலவச வரம்பைக் கடந்த பிறகு, ஒவ்வொரு ரொக்கம் எடுக்கும் பரிவர்த்தனைக்கும் ரூ.23 மற்றும் ஜிஎஸ்டி (GST) வசூலிக்கப்படும். அதேபோல், பணம் சாராத ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் (எடுத்துக்காட்டாக: இருப்புத் தொகை சரிபார்த்தல்) ரு.11 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
சம்பளக் கணக்கு அல்லாத பிற கணக்கு வைத்திருப்பவர்களுக்கான விதிகள்
சம்பளக் கணக்கு தவிர்த்து பிற சாதாரண சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அவர்களுக்கு எப்போதும் போல பிற வங்கி ஏடிஎம்களில் மாதம் 5 இலவச பரிவர்த்தனைகள் தொடர்ந்து வழங்கப்படும். இலவச வரம்பு முடிந்த பிறகு, ரொக்கம் எடுக்க ரூ.23 + ஜி.எஸ்.டி. மற்றும் பணம் சாரா சேவைக்கு ரூ.11 + ஜி.எஸ்.டி. கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டண முறை 2025 டிசம்பர் 1 முதல் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி.ஐ. ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனை வரம்பு
எஸ்பிஐ வங்கியின் சொந்த ஏடிஎம்களைப் பொறுத்தவரை, பிற சாதாரண கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதம் 10 இலவச பரிவர்த்தனைகள் (பணப் பரிவர்த்தனை மற்றும் பணம் சாராதவை சேர்த்து) கிடைக்கின்றன.
பிற வங்கி ஏடிஎம்களைப் பயன்படுத்தும்போது, அனைத்து நகரங்களுக்கும் முதல் 5 பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசமாகும். முன்பு பயன்பாட்டில் இருந்த மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்கள் என்ற தனிப் பிரிவு இப்போது இல்லை. சென்னை, மும்பை, புதுடெல்லி, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு நகரங்கள் முன்பு மெட்ரோ பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், எஸ்பிஐ ஏடிஎம்களில் மேற்கொள்ளப்படும் அறக்கட்டளை நன்கொடைகள் போன்ற ரொக்கம் இல்லாத பரிவர்த்தனைகள் மற்றும் பணம் சாராத சேவைகளுக்குக் கட்டணம் எதுவும் இல்லை.
சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ ஏடிஎம்களில் வரம்பற்ற பரிவர்த்தனையா?
ஆம், சௌர்யா ஃபேமிலி பென்ஷன் கணக்குகள் மற்றும் ஃபேமிலி சேவிங்ஸ் அக்கவுண்ட் – எஸ்பிஐ ரிஷ்டே உட்பட அனைத்து வகை சம்பளக் கணக்குகளை வைத்திருப்பவர்களும், நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்களில் வரம்பற்ற இலவசப் பரிவர்த்தனைகளைச் செய்துகொள்ளலாம்.
