அரசு நிதி வழங்க ரூ.1500 லஞ்சம் வாங்கிய இரு பெண் சமூக நல அலுவலர்கள் கைது

சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலப்பு திருமண தம்பதிக்கான அரசு நிதி வழங்க ரூ.1500 லஞ்சம் வாங்கிய சமூக நல விரிவாக்க அலுவலர் பூங்கொடி 58, ஊர் நல அலுவலர் சகுந்தலா 58, ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சாத்துார் அண்ணாநகரைச் சேர்ந்தவர் தாமரைக்கண்ணன். இவர் கலப்பு திருமணம் செய்துள்ளார். கலப்புத்திருமணம் செய்த தம்பதியினருக்கு தமிழக அரசு ரூ.50, 000, 4 கிராம் தங்கம் வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்காக தாமரைக்கண்ணன், ஊர் நல அலுவலர் சகுந்தலாவிடம் மனு வழங்கினார். அவர் இத்திட்டத்தில் நிதி உதவி பெற ரூ.1500 லஞ்சம் தர வேண்டும் என கூறியுள்ளார்.

நேற்று மதியம் 12:00 மணிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த தாமரைக்கண்ணன் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஊர் நல அலுவலர் சகுந்தலாவிடம் வழங்கினார். அவர் சமூக நல விரிவாக்க அலுவலர் பூங்கொடியிடம் பணத்தை கொடுத்த போது அங்கு மறைந்திருந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

சமூக நல விரிவாக்க அலுவலர் பூங்கொடி, சொந்த வீடு மம்சாபுரத்தில் உள்ளதால் அவரது வீட்டை சோதனை செய்ய அவரை அழைத்துக் கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர்.

சாத்துார் பெரியார் நகரில் வசிக்கும் சகுந்தலாவிடமும் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

Source link