– சிறப்பு நிருபர் –
தமிழகத்தில் கலந்தாய்வு முடிந்த பிறகும் நிரப்பப்படாத, ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ எனப்படும், உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான காலியிடங்கள், அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்டன. அவ்வாறு ஒப்படைக்கப்பட்டு இன்னமும் நிரம்பாமல் இருக்கும் இடங்களை மீண்டும் தமிழக அரசிடமே ஒப்படைக்கக் கோரி தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழகத்தால் வழங்கப்பட்டு, நிரப்பப்படாமல் இருக்கும் அனைத்து இடங்களும் மீண்டும் தமிழகம் வசம் ஒப்படைக்கப்படும்’ என, மத்திய அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதேசமயம், ‘உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்பதே தங்கள் நிலைப்பாடு’ என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த கருத்திற்கு தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
