புதுடில்லி: ஆந்திராவின் திருப்பதியில் திருமலை ஏழுமலையான் கோவில் லட்டு கலப்பட வழக்கு விசாரணையின்போது தேவஸ்தான அதிகாரிகள் சிலர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ.,க்கு தகவல் கிடைத்தது. இந்த தகவல்கள் ஆந்திர லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
முன்னாள் தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டியின் தனி உதவியாளர் சின்ன அப்பண்ணா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தேவஸ்தான துணை செயல் அலுவலர் லோகநாதம் மற்றும் அவரது உறவினர்களின் திருப்பதியில் உள்ள நான்கு இடங்களில் சமீபத்தில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இதில், லோகநாதத்தின் மனைவி பெயரில் வாங்கப்பட்ட வீடு, வீட்டுமனைகள் உள்ளிட்ட சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவரது மகன் பெயரில் பதிவு செய்யப்பட்ட வீட்டுமனை மற்றும் லோகநாதம், அவரது மகன் பெயரில் இருந்த நான்கு நிலையான வைப்பு தொகைகளுக்கான ஆவணங்களும் சிக்கின.
மேலும், 31.9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கூட்டுச் சொத்து ஆவணமும் கைப்பற்றப்பட்டது. சோதனையில் 2 கிலோ தங்கம், 12.5 லட்சம் ரூபாய் ரொக்கம், 6.5 கிலோ வெள்ளி ஆகியவையும் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட மொத்த சொத்துக்களின் மதிப்பு 5 கோடி ரூபாய்க்கும் மேல் என போலீசார் கணக்கிட்டு உள்ளனர். இதையடுத்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.
