கோவை: ”ஹிந்துக்களின் குழந்தை பிறப்பு சதவீதம், சரிவில் இருந்து மீண்டு வர வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,” என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு பொதுச்செயலர் மிலிந்த் பராண்டே கூறினார்.
கோவை குஜராத் சமாஜ் பவன் அரங்கில், நேற்று இளம் தொழில் முனைவோர் உடனான கலந்துரையாடலில் அவர் பேசியதாவது:
நம் நாட்டில் ஹிந்துக்களின் பிறப்பு விகிதம் சரிந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் சகோதர, சகோதரிகளே இருப்பதில்லை.
பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்களே இருக்கின்றனர். நம் நாட்டில் ஹிந்துக்கள் அதிகமாக இருக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும்.
கொரோனா காலகட்டத்தில் தொற்று பரவி, உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. நம் நாடு மிக விரைவாக மீண்டு எழுந்தது. ஏனென்றால் கொரோனாவை பற்றிய விழிப்புணர்வு நாடு முழுக்க ஏற்பட்டதே காரணம்.
அதே போல் ஹிந்துக்களின் குழந்தை பிறப்பு சதவீதமும் சரிவில் இருந்து மீண்டு வரவேண்டும். அதற்கான விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
