நேபாளத்தில் மாயமானவர்களை மீட்க உறவினர்களுக்கு மரபணு சோதனை: தமிழக அரசு ஏற்பாடு

சென்னை: நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்களை அடையாளம் காண்பதற்கு ஏதுவாக, உறவினர்களுக்கு தடய அறிவியல் ஆய்வகங்கள்ள வாயிலாக, மரபணு பரிசோதனை செய்ய, தமிழக அரசு ஏற்பாடு செய்து உள்ளது.

நேபாளத்தில் கடந்த மாதம் 26ம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய, தமிழகத்தை சேர்ந்த 305 பேரில், 220 பேர், பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள, 85 நபர்களைத் தொடர்புகொள்ள தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

காணாமல் போனவர்களை அடையாளம் காண்பதற்கு வசதியாக, நேபாள அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, காணாமல் போனவர்களின் முதல் நிலை உறவினர்களில் விருப்பமுள்ளவர்கள், டி.என்.ஏ., எனப்படும், மரபணு பரிசோதனை செய்வதற்கு, சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மண்டலங்களின் தடய அறிவியல் ஆய்வகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களின் முதல் நிலை உறவினர்களான தாய் அல்லது தந்தை அல்லது மகன் அல்லது மகள், கட்டணமின்றி இச்சோதனை செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விருப்பமுள்ள உறவினர்களை, அருகில் உள்ள தடய அறிவியல் ஆய்வகங்களுக்கு அழைத்து சென்று, கட்டணமின்றி டி.என்.ஏ., பரிசோதனை எடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்யவும், அதை நேபாள அரசின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவும், மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த விபரங்களுடன் நேபாளம் செல்ல விரும்பும் உறவினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும், தமிழக அரசால் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் விபரங்களுக்கு, 1800 3093793, 80690 09901, 80690 09900 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link