“சமூக பேதம் இல்லாமல் காவல்துறை அணுக வேண்டும்”  – தவெக எம்.எல்.ஏ சிந்து கோரிக்கை!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று (03-09-26) முதல்வர் விஜய் விதி எண் 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் விவாதம் நடைபெற்றதை தொடர்ந்து பெரும்பான்மை ஆதரவுடன் அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கையை அத்துறையின் அமைச்சர் முதல்வர் விஜய் தாக்கல் செய்தார். இந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும் தினமும் கொலை, கொள்ளை நடப்பதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அப்போது தவெக – திமுக இடையே கடும் வார்த்தை போர் நடைபெற்றது.அதனை தொடர்ந்து இந்த விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளையும் கேள்விகளையும் முன்வைத்தனர்.

அதன்படி இந்த விவாதத்தின் போது பேசிய குடியாத்தம் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ சிந்து, “காவல்துறை மற்றும் காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களோ வரும் போது சொந்த சமூக பாசம், பிற சமூக வெறுப்பு என்ற அடிப்படையில் அணுகப்படுவதாக பல சமூக ஆர்வலர்கள் இதை பற்றி பேசியிருக்கிறார்கள். பத்திரிகைகளில் கட்டுரைகளாகவும் வந்திருக்கிறது. ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் இதை பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது. நான் அனைத்து அதிகாரிகளையும் சொல்லவில்லை.

இது ஒரு சரியான அணுகுமுறை கிடையாது. குற்றத்தின் அடிப்படையிலேயே அணுக வேண்டும். இது தொடர்ந்தால் குற்றங்கள் அதிகரிக்கும், காவல்துறையின் மீது வெறுப்புணர்ச்சி தூண்டும், சட்ட ஒழுங்கு சீர்குலையும். ஆகையால் முதல்வர், காவல்துறை அதிகாரிகளுக்கு சமூக பேதம் இல்லாமல் குற்றத்தின் அடிப்படையிலேயே அணுக வேண்டும் என்று அறிவுறுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை வைத்தார். 

Source link