சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, 2009ஆம் ஆண்டில் இருந்து தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளெமிங்கை, அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டனர்.
என்ன காரணம்? கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. மேலும், 170 ரன்களை கூட சேஸ் செய்ய முடியாமல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தடுமாறி வந்தது. ஐபிஎல் ஏலத்திலும், டிரேடிங்கிலும் தரமான வீரர்களை வாங்காதது, சஞ்சு சாம்சனை வாங்க ரவீந்திர ஜடேஜா, சாம் கரண் ஆகியோரை விடுவித்து, இறுதியில் ஜடேஜாவுக்கு மாற்றாக தரமான ஆல்ரவுண்டரை வாங்க முடியாமல் போனது போன்ற விஷயங்கள், பிளேமிங் மீது அதிருப்தியை அதிகரித்தது.
இதனால்தான், பிளெமிங்கை பயிற்சியாளர் பதவியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் நீக்கியது. இதனைத் தொடர்ந்து, தற்போது புது தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் சிஎஸ்கே நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
என்ன தகுதி? சமீப காலமாகவே பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. இந்நிலையில், அப்படிப்பட்ட அணிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில், அணியை கட்டமைக்கும் ஆற்றல் உடையவரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க சிஎஸ்கே முடிவு செய்தது.
முதலில், மகேந்திரசிங் தோனியிடம்தான் சிஎஸ்கே நிர்வாகம் பேசியது. ஆனால், பயிற்சியாளராக செயல்பட முடியாது என தோனி மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து, பிரெண்டன் மெக்கல்லம் உள்ளிட்ட சில வெளிநாட்டு பயிற்சியாளர்களை சிஎஸ்கே நிர்வாகம் தொடர்புகொண்ட நிலையில், அவர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
சுரேஷ் ரெய்னா தீவிரம்: இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஆகிவிட வேண்டும் என்ற முனைப்பில் சுரேஷ் ரெய்னா, தொடர்ச்சியாக சிஎஸ்கே நிர்வாகத்திடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அணியை ஆக்ரோஷமாகவும், அதிரடியாகவும் கட்டமைக்கவும், பீல்டிங்கில் தரமான அணியாக மாற்றவும் என்னால் முடியும் என சிஎஸ்கே நிர்வாகத்திடம் ரெய்னா தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறாராம்.
சிஎஸ்கே, ரெய்னா உறவு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 முதல் 2015 வரையும், பிறகு 2018 முதல் 2021ஆம் ஆண்டு வரையும் விளையாடி வந்த சுரேஷ் ரெய்னா, மொத்தம் 176 போட்டிகளில் 171 இன்னிங்ஸ் பேட்டிங் ஆடி, 32.32 சராசரி, 136.88 ஸ்ட்ரைக் ரேட்டில் 4,687 ரன்களை குவித்து, மிஸ்டர் ஐபிஎல் எனும் பட்டத்தை தனதாக்கி கொண்டார். இதில், 33 அரை சதம், ஒரு சதமும் அடங்கும். 171 சிக்ஸர்களையும், 425 பவுண்டரிகளையும் ரெய்னா அடித்துள்ளார்.
மேலும், சிஎஸ்கேவுக்காக 7.39 எகானியில் பந்துவீசி 25 விக்கெட்களை எடுத்துள்ளார். 102 கேட்களையும் பிடித்துள்ளார். இப்படி, பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் ரெய்னா மீது எந்த குறையும் இல்லை. இதனால், சுரேஷ் ரெய்னாவுக்கு தலைமை பயிற்சியாளர் பதவியை கொடுத்தால், அவர் மிகச்சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கேவில், சுரேஷ் ரெய்னா தலைமை பயிற்சியாளராகவும், ஆலோசகராக தோனியும் இருந்தால், ரசிகர்கள் மத்தியில் சிஎஸ்கேவுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
