திருச்சியில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் என்று பல்வேறு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. இவை தவிர்த்தும் அபல நூறு பழைமையான சிறப்புடைய ஆலயங்கள் பல உண்டு.
அவற்றில் ஒன்று திருச்சி பீமநகர் வேணுகோபால கிருஷ்ணன் கோயில். திருச்சி சென்ட்ரல் பஸ் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் பீம நகரில் உள்ளது ஆலயம். இது குழந்தை வரமளிக்கும் தலமாகவும், குறை தீர்க்கும் திருக்கோயிலாகவும் விளங்குகிறது.
மேலும் அண்ணனான கண்ணனுகுத் துணையாக அவன் தங்கை காளிகா பரமேஸ்வரியும் அருகே எழுந்தருளி இருப்பதும் விசேஷம்.
இந்தப் பகுதி மக்கள் வேணுகோபால சுவாமியைத் தங்களின் குடும்பத்தில் ஒருவராகவே கருதி பக்தி செய்கிறார்கள். `குழந்தையும் தெய்வமும் கொண்டாடுற இடத்துல’ என்பது பழமொழி.
`எங்கெல்லாம் தன்னைக் கொண்டாடுகிறார்களோ அங்கே வந்து அமர்ந்துகொள்வான் கண்ணன். அப்படித்தான் இங்கே அமர்ந்து அருள்பாலிக்கிறார் வேணுகோபால சுவாமி.
ஆரம்பத்தில் பசுக்கள் உலாவிய இடமாகவும், பிறகு பிரிட்டிஷ் காலத்தில் ராணுவ வீரர்கள் தங்கி இருந்த இடமாகவும் இப்பகுதி இருந்துள்ளது. அப்போது இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக வழிபடப்பட்டு வந்தாள் ஒரு சுயம்பு காளி. பிறகு இங்கிருந்த யாதவ மக்களின் வேண்டுதலுக்காக தங்கை மகாகாளிகா பரமேஸ்வரியுடன் அண்ணனான வேணுகோபாலனும் இங்கே குடி அமர்ந்தார் எனத் தலவரலாறு கூறுகிறது.
வடக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் அழகிய நுழைவு வாயில் தாண்டினால் நீண்ட மண்டபம், பிறகு மகாமண்டபம், அர்த்த மண்டபம் எனப் பரந்துள்ளது. அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணன் நின்ற நிலையில் குழல் ஊதிய கோலத்தில், குறுநகைத் தவழ அருள்பாலிக்கிறார். எத்தனை முறை தரிசித்தாலும் சலிக்காத திருமேனி! குறைகளைக் கூறக்கூட மனம் மறந்துவிடும் அருட்கோலம்.
தரிசித்து வெளியே வர, மகாமண்டபத்தின் வலது பக்கமாக ஸ்ரீகாளிகா பரமேஸ்வரியின் சந்நிதி உள்ளது. கிழக்கு நோக்கி, தீ ஜுவாலை தலையைச் சுற்றி அனல் பறக்க வீச எழுந்தருளி இருக்கிறாள். சூலம், நந்தி புடை சூழ எழுந்தருளி இருக்கும் இவளைக் கண்டாலே சகல அச்சங்களும் கவலைகளும் ஓடிவிடும் என்கிறார்கள்.

ஆலயத்தில் சொர்ண கணபதி, கால பைரவர், ராஜ கணபதி, விஷ்ணு துர்கை, நாகராஜா, சுந்தரேஸ்வர், அன்னை மீனாட்சி, ஐயப்பன், முருகன் வள்ளி தெய்வானை போன்ற பல சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள எரிசின கொற்றவை எனும் விஷ்ணு துர்கையை வழிபட்டால் திருமண பாக்கியம் கிடைக்குமாம். ராகு காலத்தில் விளக்கிட்டு இவளை வேண்டினால் தீராத நோய்களும் தீருமாம்.
ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்ரீவேணுகோபாலனுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதில் கலந்துகொள்பவர்களுக்கு மழலைப் பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. கிருஷ்ண ஜயந்தி அன்று இங்கு நடைபெறும் உறியடி உற்சவம் பிரசித்தமானது, அதேபோல பங்குனி மாத கடைசி வெள்ளியில் ஸ்ரீகாளிகா பரமேஸ்வரிக்கு நடைபெறும் பூச்சொரிதல் விழா சிறப்பானது.

குறிப்பாக உடல் மற்றும் மனரீதியாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ரோகிணி நட்சத்திர நாளில் இங்கு வந்து வேணுகோபாலனை வேண்டிக்கொண்டு அபிஷேகம் செய்தால் அவர்கள் குணமடைகிறார்கள் என்பது வெகுகால நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பலரும் மீண்டும் இங்கு வந்து கிருஷ்ணனுக்கு பால் பாயசம் சமர்ப்பிப்பதும் இங்கு சகஜமாம்.
இப்படி தன்னை நாடிவந்தவர்க்கெல்லாம் நலம் செய்யும் வேணுகோபால சுவாமியை வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை நலமாகும், வளமாகும்.
