உங்களுடைய வங்கிக் கணக்கில் உள்ள பழைய மொபைல் நம்பரை மிக எளிதாக வீட்டில் இருந்தபடியே நீங்களே மாற்றிவிடலாம். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
நம் அனைவரிடமுமே வங்கிக் கணக்கு இருக்கும். பலர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் கூட வைத்திருப்பார்கள். வங்கிக் கணக்கில் மொபைல் நம்பர் இணைக்கப்பட வேண்டும். இந் த விஷயத்தில் பலர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சிலர் நீண்ட காலமாக ஒரே மொபைல் நம்பரை வைத்திருப்பார்கள். அவர்களுடைய வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்த பழைய மொபைல் எண் செயலிழந்து, அதை மீண்டும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அப்படி இருந்தால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. வங்கிக் கிளைக்கு நேரில் சென்று உங்கள் புதிய எண்ணைப் புதுப்பிக்கலாம். வீட்டிலிருந்தபடியே மொபைல் நம்பரை அப்டேட் செய்ய விரும்பினால் அதற்கான வசதியும் உள்ளது.
உங்கள் வங்கிக் கணக்கில் புதிய மொபைல் எண்ணை நீங்களே நேரடியாகப் புதுப்பிக்கலாம். இருப்பினும், அதைச் செய்வதற்கு உங்கள் கணக்கில் இணைய வங்கிச் சேவை ( internet banking ) செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இணைய வங்கிச் சேவை மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களைப் புதுப்பிக்க வங்கிகள் அனுமதிக்கின்றன. இதன் மூலம் வீட்டிலிருந்தபடியே உங்கள் கணக்கில் உள்ள மொபைல் எண்ணை எளிதாகப் புதுப்பிக்க முடியும். அதேபோல, ஏடிஎம் மூலமாகவும் உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்கலாம். இது வங்கியில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க உதவும்.
வங்கிக் கணக்கில் ஆன்லைன் மூலம் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?
இதற்கு, முதலில் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று இணைய வங்கியில் (Internet Banking) உள்நுழைய வேண்டும். உள்நுழைந்த பிறகு, Profile (சுயவிவரம்), Personal Details (தனிப்பட்ட விவரங்கள்) அல்லது Contact Details (தொடர்பு விவரங்கள்) போன்ற விருப்பங்கள் இருக்கும். அவற்றில் ‘Registered Mobile Number’ (பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பிறகு, புதிய மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த வங்கி OTP அல்லது பிற சரிபார்ப்பு முறைகளைப் பயன்படுத்தலாம். சரிபார்ப்பு முடிந்ததும் உங்கள் புதிய மொபைல் எண் புதுப்பிக்கப்படும்.
ஏடிஎம் மூலமாக மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?
சில வங்கிகள் ஏடிஎம் மூலமாகவே கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்றும் வசதியை வழங்குகின்றன. உங்கள் வங்கியில் இந்த வசதி இருந்தால் அருகிலுள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்று இதைச் செய்யலாம். உங்கள் டெபிட் கார்டை ஏடிஎம் மெஷினில் செலுத்தி பின் (PIN) எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர், Registration (பதிவு), Mobile Number Update (மொபைல் எண் புதுப்பிப்பு) அல்லது Update Contact Details (தொடர்பு விவரங்களைப் புதுப்பித்தல்) போன்ற விருப்பங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பழைய மற்றும் புதிய மொபைல் எண்களை உள்ளிட்ட பிறகு வங்கி அறிவுறுத்தும் வகையில் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க வேண்டும். அதன்பின் மொபைல் எண் புதுப்பிக்கப்படும். வங்கிக்கு நேரில் சென்றும் மொபைல் எண்ணை மாற்றுவதற்கும் நீங்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கு நீங்கள் ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
மொபைல் எண்ணை மாற்றும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!
மொபைல் எண்ணை மாற்றுவதற்கு முன்னர் இந்த முக்கியமான விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். வங்கியின் அதிகாரப்பூர்வ செயலி அல்லது இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மொபைல் எண்ணை மாற்றுவதற்காக யாரேனும் எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் உங்களுக்கு ஒரு இணைப்பை (link) அனுப்பினால், அதை கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் எண்ணை மாற்றிய பிறகு மொபைல் எண் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க ஒரு பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். அதுகுறித்த செய்தி உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.
Source link
