மைசூரு தசரா பண்டிகை: விஜய் உள்ளிட்ட தென்னிந்திய முதல்வர்களை அழைக்க டி.கே.சிவக்குமார் முடிவு – karnataka cm dk shivakumar decided to invite southern states cm for mysuru dasara on oct 2026

வரும் அக்டோபர் மாதம் கர்நாடகாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் மைசூரு தசரா பண்டிகைக்கு தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்களை அழைக்க டி.கே.சிவக்குமார் முடிவு செய்திருக்கிறார். இது அரசியல் ரீதியான வேறுபாடுகளை களைந்து, நிர்வாக ரீதியில் இணக்கமாக செயல்படுவதற்கு அடித்தளமாக இருக்கும் என்கின்றனர்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தென்னிந்திய மாநில முதலமைச்சர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், கேரளா முதலமைச்சர் வி.டி.சதீசன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா துணை முதலமைச்சர் மல்லு பாட்டி விக்ரமர்கா ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது.

மீண்டும் ஒன்றுகூடும் தென்னிந்திய முதலமைச்சர்கள்

இதேபோல் மீண்டும் ஒருமுறை தென்னிந்திய முதலமைச்சர்கள் சந்திப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இம்முறை நிர்வாக ரீதியிலான புரிந்துணர்விற்காக அல்லாமல், கொண்டாட்ட மனநிலையில் சிறப்பு பண்டிகை ஒன்றில் கலந்து கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, கர்நாடகா மாநிலத்தில் புகழ்பெற்ற மைசூரு தசரா பண்டிகையில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுக்கவுள்ளார். இந்த பண்டிகை வரும் அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நாளைக்கு இந்தியாவே Trend ஆக போகும் முதல்வரின் டெல்லி விசிட்! | Exclusive |

தசரா பண்டிகை கொண்டாட்டம் – பின்னணி

விஜயதசமி கொண்டாட்டம்
நவராத்திரியின் இறுதி நாளை விஜயதசமி அல்லது தசரா என்று கொண்டாடுகின்றனர்.
மகிஷாசூரனை வதம் செய்த துர்க்கை
மகிஷாசூரனை அழிக்க தேவர்கள் ஒன்று கூடி துர்க்கை அம்மனை உருவாக்கியதாக புராணங்களில் கூறப்படுகிறது. தொடர்ந்து 9 நாட்கள் போரிட்டு 10வது நாளில் மகிஷாசூரனை வதம் செய்வார். இதை கொண்டாடும் வகையில் தான் தசரா சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது.
கர்நாடகாவில் பிரபலம்
இது பல மாநிலங்களில் கொண்டாடப்பட்டாலும் கர்நாடகாவில் தான் உலகப் புகழ்பெற்ற வகையில் வெகு விமர்சையாக நடைபெறும்.

கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் முக்கிய முடிவு

இதனை மேலும் சிறப்பிக்கும் வகையில் முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நடப்பாண்டு முக்கிய முடிவை எடுத்துள்ளார். இது தசரா பண்டிகையை கொண்டாடும் நிகழ்வாக மட்டுமின்றி, பல்வேறு பாரம்பரிய, கலாச்சாரங்கள், ராணுவம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையிலும் அரங்கேறவுள்ளது. இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் நடனங்கள் இடம்பெறவுள்ளன.

ஏர்ஷோ நடத்த மத்திய அரசிடம் கோரிக்கை

மேலும் தரைப்படை, கப்பற்படை, விமானப்படை ஆகியவற்றின் அணிவகுப்பு, ஏர்ஷோ, ட்ரோன் ஷோ ஆகியவையும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளனர். இந்த நிகழ்வில் பிற நாடுகளை சேர்ந்த தூதர்கள், உயர் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடவுள்ளனர். அதுமட்டுமின்றி ஏராளமான போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

2026 மைசூரு தசரா – பிரம்மாண்ட ஏற்பாடுகள்

பழமையான கார்களின் அணிவகுப்பு, மாநில பெருமைகளை பறைசாற்றும் வகையிலான விற்பனையகங்கள், அலங்காரங்கள் உள்ளிட்டவற்றையும் கண்டு ரசிக்கலாம். இதில் இந்திய ராணுவப் படைகள், இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ, கல்வி நிறுவனங்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் எனப் பலருக்கும் அழைப்பு விட முடிவு செய்துள்ளனர். எனவே மைசூருவில் மிகவும் பிரம்மாண்டமாக 2026 தசரா பண்டிகை களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link