”பணம் மட்டுமே நிம்மதியைத் தந்துவிடாது”; துறவியாகிறார் பிரபல தொழிலதிபர்

தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பிரபலமான நாடான தாய்லாந்தில், 1999 ஆம் ஆண்டு ’ஹாவெல்ஸ்’ ஐஸ்கிரீம் நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் நிறுவனர் சிரிபோங் அக்காரஸ்ரியுக், தான் பல ஆண்டுகளாக நடத்தி வந்த இந்த நிறுவனத்தை, தற்போது மொத்தமாக விற்றுவிட்டு காட்டில் துறவியாக வாழ முடிவெடுத்துள்ளார்.  இது குறித்தான அறிவிப்பை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு உறவினர்களிடம் மட்டுமல்லாமல், தொழிலதிபர்கள் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 15 ஆண்டுகளாக துறவு வாழ்க்கையை வாழத் திட்டமிட்டு வந்த அவர், தற்போது அந்த முடிவை எடுத்துள்ளார். இதனிடையே, 165 மில்லியன் பாட் (ரூ.48 கோடி) தனது நிறுவனம் மற்றும் சொத்துக்களை விற்கத் தயாராக இருப்பதாகவும், இந்த சொத்துக்களை விற்றுத் தர முன் வருபவர்களுக்கு 5 மில்லியன் பாட் தரகு கட்டணத்தைத் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.  

ஹாவெல்ஸ் நிறுவனம் தாய்லாந்தின் மிகப் பிரபலமான நிறுவனமாகும். இருந்தாலும், தனது நீண்ட நாள் ஆன்மீக கனவை நிறைவேற்றுவதற்காக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்த நிறுவனத்தின் விற்பனை தொடர்பான அறிவிப்பையும் சமூக வலைத்தள பக்கத்தில் சிரிபோங் வெளியிட்டுள்ளார்.  இது சம்பந்தமான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனிடையே, பலரும் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு பணமும் புகழும் மட்டுமே ஒரு மனிதனுக்கு நிம்மதியைத் தந்துவிடாது என்பதை உணர்த்துகிறது எனப் பதிவிட்டு வருகின்றனர்.  

Source link