இந்த நிலையில் தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ள சூழலில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி 15 நாட்களுக்கு மேலாக சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில்போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக முற்றுகை போராட்டங்கள், அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றி தயாராக இருப்பதாக தகவல் தெரிவித்தார். இருப்பினும் அவர்களின் முக்கிய கோரிக்கையான தினக்கூலி உயர்வு, ஒப்பந்தமுறையில் பணி புரியும் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வார விடுப்பு, பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரை நேரில் சந்தித்து வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை அமைச்சர்களான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்ட 3 பேர் இன்று (04-09-26) நேரில் சந்தித்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரச்சனைக்கு சுமூகமான முடிவு எடுப்பதற்கும் அவர்களின் கோரிக்கைகளை செவி சாய்த்து அதை நிறைவேற்றுவது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
