ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் (TEIs) ஆண்டுதோறும் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை (Performance Appraisal Report) தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் (NCTE) செயற்குழு உறுப்பினர் செயலாளர் வெளியிட்ட பொது அறிவிப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் ஒரு குழந்தையின் வளர்ச்சி என்பது தொடக்கப் பள்ளி ஆசிரியரின் பங்குடன் ஒருங்கிணைந்த வகையில் தொடர்புடையது என்பதைச் சுட்டிக்காட்டியது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
நாளை (செப்டம்பர் 5) ஆசிரியர் கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று (செப்டம்பர் 3) உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அராதே ஆகியோர் அடங்கிய அமர்வு, வெளியிடப்பட்ட தீர்ப்பில், 2023 மார்ச் 13 அன்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் 2019 செப்டம்பர் 22-ஆம் தேதி வெளியிட்ட பொது அறிவிப்பு தன்னிச்சையானதும் சட்டவிரோதமானதும் என டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
இது குறித்து உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில், முடிவாக, செயற்குழுவின் உறுப்பினர் செயலாளர் வெளியிட்ட பொது அறிவிப்பு சட்டபூர்வமானதும் செல்லுபடியாகும் என்று நாங்கள் தீர்மானிக்கிறோம். அந்த பொது அறிவிப்பை ரத்து செய்ததில் உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தவறு செய்துள்ளது. ஆசிரியர் கல்வி நிறுவனங்களிடம் (TEIs) செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை பதிவேற்றுமாறு கோருவதற்கு தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்திற்கும் அதன் செயற்குழுவிற்கும் அதிகார வரம்பு உள்ளது” என்று உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.
மேலும், இந்த பொது அறிவிப்பை வெளியிடுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் தேசிய ஆசிரியர் கல்விக் குழும கவுன்சிலுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், செயற்குழுவுக்கு அந்த அதிகாரம் இல்லை என்றும் கூறி இந்த அறிவிப்பு எதிர்க்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் எடுத்த அணுகுமுறையுடன் நாங்கள் உடன்படவில்லை. ஆசிரியர் கல்வியை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து ஆண்டுதோறும் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையைப் பெறுவதற்கு தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் கவுன்சிலுக்கும் அதன் செயற்குழுவிற்கும் போதுமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று நாங்கள் கருதுகிறோம்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், “நாட்டில் ஆசிரியர் கல்வி முறையின் திட்டமிட்ட மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பு மேற்கொள்ளும் ஒழுங்குமுறை நடவடிக்கையாக, ஆசிரியர் கல்வி நிறுவனங்களிடம் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கோருவதை எவ்வாறு தடுக்க முடியும் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. சட்டத்தில் இதற்கென குறிப்பிட்ட அதிகாரம் வழங்கப்படவில்லை என்றாலும், ஒரு ஒழுங்குமுறை அமைப்பின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு துணைபுரியும், அவற்றுடன் தொடர்புடைய நடவடிக்கையாக இத்தகைய ஒழுங்குமுறை நடவடிக்கை எப்போதும் மேற்கொள்ளப்படலாம்.
தேசிய ஆசிரியர் கல்வி குழுமததின் செயல்பாடுகளே இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) மூலம் செயல்திறன் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. எனவே, தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் தனது ஒழுங்குமுறை அதிகார வரம்புக்குள் செயல்படும் கல்வி நிறுவனங்களிடமிருந்து தேவையான செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையைப் பெறுவது இயல்பானதும், அதன் பணிகளுடன் தொடர்புடையதுமான நடவடிக்கையாகும். கல்வி நிறுவனங்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவதை கவுன்சிலும் அதன் அமைப்புகளும் உறுதி செய்வது அவசியம்” என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், 2009-ஆம் ஆண்டின் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE Act) பிரிவு 23, குழந்தைகளின் கல்வி உரிமையைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு தகுதியான ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது என்று கூறியது. இதன் அடிப்படையில், குறைந்தபட்ச தகுதிகளை நிர்ணயிப்பதற்காக ஒரு ‘கல்வி அதிகார அமைப்பு’ (Academic Authority) ஏற்படுத்த சட்டம் வழிவகுக்கிறது.
பிரிவு 23-ல் குறிப்பிடப்படும் அந்த ‘கல்வி அதிகார அமைப்பு’ என்பது, 1993-ஆம் ஆண்டின் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட தேசிய ஆசிரியர் கல்விக் குழுமமே (NCTE) என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், 2026 ஜனவரி 13 அன்று தினேஷ் பிவாச் அஷ்திகர் (Dinesh Biwaji Ashtikar v. State of Maharashtra & Ors.) வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டியது.
அந்த உத்தரவில், தொடக்கக் கல்விக்கான உரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரிப்பதன் உண்மையான விளைவு, சம்பந்தப்பட்ட அரசு, உள்ளாட்சி அமைப்பு, அருகிலுள்ள பள்ளி, பெற்றோர் / பாதுகாவலர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட ஐந்து பொறுப்பேற்க வேண்டிய தரப்பினரை (duty-bearers) அங்கீகரிப்பதாகும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த பொறுப்பேற்க வேண்டிய தரப்பினருக்கு தரமான கல்வியை உறுதி செய்யும் கடமையை வழங்குவதற்காக, மேற்கண்ட பட்டியலில் மேலும் இரண்டு தரப்பினரைச் சேர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி ஆறாவது பொறுப்பேற்க வேண்டிய தரப்பினர், ஆசிரியர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி வழங்கும் படிப்புகளை நடத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களான ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் (TEIs) ஆகும். இவை தேசிய ஆசிரியர் கல்வி குழும சட்டத்தின் பிரிவு 2(e)-ல் வரையறுக்கப்பட்டுள்ளன” என்று நீதிமன்றம் கூறியது.
அடுத்து ஏழாவது பொறுப்பேற்க வேண்டிய தரப்பினர் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ஆகும்” என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி முறையின் திட்டமிட்ட மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்தும் பொறுப்பு கவுன்சிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் கல்வியை வழங்கும் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் திறம்படவும், பயனுள்ளதாகவும் செயல்படுவதையும், அவற்றின் நிர்வாக நடவடிக்கைகளை நேர்மையுடனும் ஒருமைப்பாட்டுடனும் மேற்கொள்வதையும் கவுன்சில் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், “கவுன்சிலும், அதனுடன் அமைக்கப்பட்டுள்ள செயற்குழு மற்றும் மண்டலக் குழுக்கள் போன்ற அமைப்புகளும் ஆற்ற வேண்டிய கடமைகள், அனைத்து பொறுப்பேற்க வேண்டிய தரப்பினரின் கடமைகளிலும் மிக முக்கியமானவையாக இருக்கலாம் என்பதை அறிவிப்பதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.
