புதுடில்லி: போருக்குப் பிந்தைய காலத்திலிருந்து இத்தாலியின் மிக நீண்ட காலம் தொடர்ச்சியாகப் பிரதமராகப் பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்ற தனது நண்பர் ஜார்ஜியா மெலோனிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி. இவருக்கும் பிரதமர் மோடிக்கும் சிறந்த நட்பு உண்டு. ஜி 7 மாநாடு உட்பட உலக நாடுகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் இத்தாலி பிரதமரை பிரதமர் மோடி சந்தித்து பேசுவது வழக்கம். எப்போதுமே இவர்களது சந்திப்பு முக்கியமான ஒன்றாக தான் இருக்கும். இருவரும் செல்பி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரவேற்பை கூட பெற்று இருக்கிறது.
இந்நிலையில் இன்று (செப் 04) இத்தாலி பிரதமர் மெலோனிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
இத்தாலியின் போருக்குப் பிந்தைய வரலாற்றில், மிக நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராகப் பணியாற்றும் பெருமையைப் பெற்றுள்ள எனது நண்பர் பிரதமர் மெலோனிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மைல்கல், அவரது தலைமையின் மீது இத்தாலி மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், ஆதரவையும் பிரதிபலிக்கிறது.
இந்தியா-இத்தாலி இடையிலான உறவை வலுப்படுத்துவதில் அவரது நட்பு முக்கிய பங்காற்றியுள்ளது; இரு நாட்டு மக்களுக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்க, தொடர்ந்து இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். வரவிருக்கும் ஆண்டுகளிலும் அவர் தொடர்ந்து வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
