ரஷ்யாவின் புதிய தாக்குதல் உத்தியால் நிலைகுலைந்த ‘கீவ்’ நகரவாசிகள் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், BBC News Ukraine

படக்குறிப்பு, இந்த கோடைக்காலத்தில் ரஷ்யா நகரத்தின் மீது தனது தாக்குதல்களை தீவிரப்படுத்திய பிறகு, டாரியா ஸ்டோலியரோவா கீவிலுள்ள தனது குடியிருப்பை விட்டு வெளியேறினார்.எழுதியவர், டயானா குரிஷ்கோ மற்றும் விக்டோரியா காலிம்பெட்பதவி, பிபிசி நியூஸ் யுக்ரேனியன்

பிரசுரிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பின் பெரும்பாலான காலத்தில், டாரியா ஸ்டோலியரோவா குண்டுவீச்சுகளுக்கு பயப்படவில்லை.

கடும் குண்டுவீச்சு நடக்கும் இரவுகளில் கூட, 27 வயதான அவரால் கீவில் உள்ள தனது குடியிருப்பில் வெடிச்சத்தங்களுக்கு மத்தியிலும் தூங்க முடிந்தது. பல யுக்ரேனியர்களைப் போலவே, அவர் “இரண்டு சுவர்கள் விதி”யை நம்பியிருந்தார். அதாவது, தனக்கும் வெளி உலகிற்கும் இடையில் இரண்டு சுவர்கள் இருக்குமாறு பாதுகாப்பாக இருப்பது.

ஆனால் இந்த ஆண்டு நிலைமைகள் மாறிவிட்டன.

சமீப மாதங்களில், யுக்ரேன் தலைநகரின் மீது ரஷ்யா தனது தாக்குதல்களின் தீவிரத்தையும் அடிக்கடி நிகழும் தன்மையையும் அதிகரித்துள்ளது.

ஜூலை மாதத்தின் முதல் 10 நாட்களிலேயே, மூன்று பெரிய தாக்குதல்களில் டஜன் கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டன. உள்ளூர் அதிகாரிகளின் தகவலின்படி, இதில் கிட்டத்தட்ட 60 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் மாதத்திலும் தாக்குதல்கள் தொடர்ந்தன. செப்டம்பர் 1 அன்று கீவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மீது நடத்தப்பட்ட மற்றொரு பெரிய அளவிலான தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மே மாதத்தில் ஒரிரவு நடந்த தாக்குதலின்போதுதான், தன் வீட்டில் இனி தனக்கு பாதுகாப்பு இல்லை என்பதை டாரியா உணர்ந்தார்.

அவரும் அவரது காதலரும் ஒன்பதாவது மாடியில் உள்ள தங்கள் குடியிருப்பின் உள் வராந்தாவில் குத்துச்சண்டைப் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சுற்றியெங்கும் வெடிப்புகள் நிகழ்ந்தன. அதிர்வலைகளால் ஜன்னல்கள் மீண்டும் மீண்டும் திறந்து மூடின.

சண்டை முடிந்தபின், “என் கவனத்தைத் திசைதிருப்ப எதுவும் இல்லை,” என்று டாரியா கூறுகிறார். “அப்போதுதான் நான் உண்மையில் பயந்துபோயிருந்தேன் என்பதை உணர்ந்தேன்.”

முதலில், தாக்குதல்களின் போது அருகிலுள்ள புகலிடத்தில் தஞ்சமடையலாம் என்று அவர் நினைத்தார்.

ஆனால் ஜூன் மாதத்தில், கீவில் ஒரு இளம் தாய் புகலிடத்திற்கு செல்ல ஓடிக் கொண்டிருந்த போது உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, நகரத்தை முழுமையாக விட்டு வெளியேற வேண்டும் என்று டாரியா முடிவு செய்தார்.

அவர் கீவிலிருந்து 30 கிமீ (18.6 மைல்) தொலைவில் உள்ள ரோமன்கிவில் அமைந்துள்ள தனது குடும்பத்தின் கிராமப்புற இல்லத்திற்குத் திரும்பினார். தற்போது, பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் அவர், தினமும் இரண்டு மணி நேரம் பயணம் செய்து கீவ் சென்று திரும்புகிறார்.

ரஷ்யத் தாக்குதலால் கடுமையாக சேதமடைந்த ஒரு பெரிய கட்டடத்தின் வெளியே மீட்புப் பணியாளர்கள் காணப்படுகிறார்கள்.

பட மூலாதாரம், Ukraine State Emergency Service

படக்குறிப்பு, ஜூலை மாதத்தில் ரஷ்யத் தாக்குதலின் தாக்கத்தை காட்டும் அவசர சேவைப் புகைப்படம்

டாரியாவின் அனுபவம் தனித்துவமானதல்ல.

ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களுக்கு பழகிவிட்டதாகக் கூறும் கீவ் குடியிருப்பாளர்கள், தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்ததால் தங்கள் வாழ்க்கை முறையை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியதாக பிபிசி உலக சேவையிடம் தெரிவித்துள்ளனர்.

முன்பு, யுக்ரேனின் வான் பாதுகாப்பு அமைப்பும் ராணுவ உளவுத்துறையும் மக்களுக்கு ஓரளவிற்கு முன்கூட்டிய தகவலை வழங்கின. பெரிய அளவிலான தாக்குதல்களை முன்கூட்டியே அறிய முடிந்ததால், மக்கள் புகலிடங்களில் இரவு தங்கவோ, நகரத்தைவிட்டு வெளியேறவோ அல்லது பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவோ முடிந்தது. ஆனால் இந்த கோடைக் காலத்திலிருந்து ரஷ்யா தனது உத்திகளை மாற்றியுள்ளது.

கண்காணிப்பு விமானங்களை குறைவாகப் பயன்படுத்தி, மிகுந்த வேகத்தில் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை அதிகம் பயன்படுத்துகிறது. சில நேரங்களில், தாக்குதல் எச்சரிக்கைச் சைரன்கள் தாக்குதலுக்கு சில நொடிகள் முன்போ அல்லது முதல் வெடிப்புகளுடன் ஒரே நேரத்திலோ ஒலிக்கின்றன.

டாரியா இன்னும் வாடகைக்கு இருக்கும் தனது குடியிருப்பின் ஜன்னலில் இருந்து தனக்கு அருகில் உள்ள புகலிடத்தைப் பார்க்க முடிகிறது. இருந்தபோதிலும், அங்கு செல்வதற்கு சுமார் 10 நிமிடங்கள் ஆகிறது. ஒரு பாலிஸ்டிக் தாக்குதலின் போது, எச்சரிக்கை வந்த பிறகு தமக்கு நான்கு நிமிடங்களோ அதற்கும் குறைவான நேரமோ மட்டுமே அவகாசம் கிடைக்கிறது என்று அவர் கூறுகிறார்.

இந்த கோடை விடுமுறையை வெளிநாட்டில் கழித்து அங்கு மக்கள் “சாதாரண” வாழ்க்கையை வாழ்வதைப் பார்த்த பிறகு, கீவை விட்டு வெளியேற ஜூன் மாதத்தில் முடிவு செய்தார். அதன் பின்னர், அவர் கீவில் ஒரே ஒரு இரவு மட்டும் தங்கியுள்ளார்.

ஆனால் நகரத்தை விட்டு வெளியேறுவது பலருக்கு ஒரு தேர்வாக இல்லை.

62 வயதான ஒல்ஹா வ்லாசோவா, தனது 98 வயது தாயார் நாடியா ஸ்ட்சிபினாவுடன் ஒரு உயரமான அடுக்குமாடிக் கட்டடத்தின் ஏழாவது மாடியில் வசிக்கிறார்.

வயது முதிர்ந்திருந்தாலும், நாடியா இன்னும் உலக நிகழ்வுகளில் தீவிர ஈடுபாட்டுடன் இருக்கிறார்.

படுக்கையில் இருந்தபடியே, யுக்ரேனிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் நிகழ்வுகளைப் பின்தொடர்கிறார். டொனால்ட் டிரம்ப் கொள்கைகள் முதல் கீவிலுள்ள ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் எப்ஸ்டீன் ஆவணங்கள் வரை அனைத்தையும் விவாதிக்கிறார்.

இடைமறிக்கப்பட்டது ரஷ்ய ஏவுகணையா அல்லது டிரோனா, அல்லது அது இலக்கை அடைந்ததா என்பதை வெறும் ஒலியைக் கேட்டு அடையாளம் காணவும் அவர் கற்றுக்கொண்டுள்ளார்.

இந்த கோடையில், அவ்வாறான இடைமறிப்புகளை குறைவாகவே கேட்டதாக அவர் கூறுகிறார்.

“அவற்றை இடைமறித்து சுட்டு வீழ்த்த போதுமான வசதி இல்லாத போது மனம் வருந்துகிறது,” என்று நாடியா கூறுகிறார்.

“அவர்களிடம் என்ன இருக்கிறதோ அதைப் பயன்படுத்தி சுடுவதை நான் கேட்கிறேன். துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள்.”

படுக்கையில் அமர்ந்து ஒரு இதழைப் படிக்கும் நாடியா. அவர் சாம்பல் நிற டி-ஷர்ட் அணிந்துள்ளார்; கருமையான முடி கொண்டுள்ளார்.

பட மூலாதாரம், BBC News Ukraine

படக்குறிப்பு, 98 வயதான நாடியா, படுக்கையிலிருந்தபடியே உலக நிகழ்வுகளை தொடர்ந்து கவனிக்கிறார்

நாடியா படுக்கையிலேயே இருப்பதால், எவ்வளவு கடுமையான தாக்குதலாக இருந்தாலும், அவரும் ஒல்ஹாவும் புகலிடத்திற்கு செல்ல முடியாது. அதற்குப் பதிலாக, வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலித்தவுடன், ஒல்ஹா தனது தாயை போர்வையால் மூடி, ஜன்னலின் அருகில் ஒரு மெத்தையை நிறுத்தி, பின்னர் தனக்கும் வெளி உலகிற்கும் இடையில் இரண்டு சுவர்கள் இருக்கும் வகையில் ஒரு அலமாரிக்குள் சென்று மறைகிறார்.

பறக்கும் கண்ணாடித் துண்டுகளிலிருந்து முகத்தைப் பாதுகாக்க, நாடியா தலையின் மீது ஒரு தலையணையை வைக்கிறார்.

அலமாரிக்குள் சென்ற பிறகு, ஒல்ஹா பலமுறை முழு இரவும் விழித்திருந்து செய்திகளைப் பார்ப்பார்.

“அவர்கள் வருகிறார்கள், எங்கள் மீது குண்டுவீசுகிறார்கள்,” என்று நாடியா கூறுகிறார்.

“நீங்கள் தூங்கத் தொடங்குவதற்குள் இன்னொரு எச்சரிக்கை வந்துவிடுகிறது. அவர்கள் மீண்டும் வருகிறார்கள். அவற்றை மீண்டும் சுடுகிறார்கள். இது முழு இரவிலும் தொடர்கிறது. மக்கள் தூங்கமாட்டார்கள். பின்னர் ஜாம்பிகளைப் போல நடமாடுவார்கள்.”

வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்த, மஞ்சள் நிற முடியுள்ள ஒல்ஹா, ஜன்னலில் ஒரு மெத்தையை பொருத்திக் கொண்டிருக்கிறார்.

பட மூலாதாரம், BBC News Ukraine

படக்குறிப்பு, பறக்கும் கண்ணாடித் துண்டுகளிலிருந்து தன்னையும் தன் தாயையும் பாதுகாக்க, ஒல்ஹா ஜன்னல் அருகே ஒரு மெத்தையை வைக்கிறார்

கீவ் நகரத்தின் மீது தொடர்ந்து நடைபெறும் ரஷ்யத் தாக்குதல்கள், இரவும் பகலும் எச்சரிக்கை சைரன்களால் மக்களின் வாழ்க்கையை இடையூறாக்கியுள்ளன.

இந்த வாரம், கோடை விடுமுறைக்குப் பிறகு குழந்தைகள் பள்ளிக்குத் திரும்பிய நிலையில், ஏற்கனவே சுமார் 100 எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றைத் தொடர்ந்து வெடிப்புகளும் தீவிபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

கீவ் நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தகவல்படி, ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடந்த தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர்.

இதன் விளைவாக, பல குழந்தைகள் இந்த வாரம் வீட்டிலேயே இருந்தனர். மற்றவர்கள் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளின் அடித்தளங்களில் பல மணி நேரத்தை கழித்தனர்.

சைரன்கள் ஒலிக்கும் போது, வணிகங்களும் பாதிக்கப்படுகின்றன. வணிக வளாகங்கள் மூடப்படுகின்றன. தரைக்கு மேல் செல்லும் மெட்ரோ நிலையங்கள் சேவையை நிறுத்துகின்றன. இதனால் நீப்பர் நதியின் இருபுறமும் உள்ள கீவின் இடது மற்றும் வலது கரைகளுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து இணைப்புகள் பல மணி நேரங்களுக்கு துண்டிக்கப்படுகின்றன.

ஒல்ஹாவுக்கு, இது நகரத்தின் மறுபுறத்தில் வசிக்கும் தனது எட்டு வயது பேத்தியை அதிகம் நேரில் பார்க்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.

பேத்தி வந்து சென்றால், திரும்பிச் செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதை அவர் அறிவார். மெட்ரோ சேவைகள் நிறுத்தப்படும் போது, கட்டணம் அதிகமான டாக்ஸி மட்டுமே அவருக்கு இருக்கும் ஒரே தேர்வாக இருக்கும். நதியைத் தாண்டி பயணம் செய்ய 1,000 ஹ்ரிவ்னியா (16.6 பவுண்டுகள்) வரை செலவாகலாம் என்று அவர் கூறுகிறார். இது யுக்ரேனின் மாதாந்திர குறைந்தபட்ச ஊதியத்தின் எட்டில் ஒரு பங்கிற்கு சமம்.

இந்த அனுபவம், கூடுதல் வான்பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்குவதில் யுக்ரேனின் சில வெளிநாட்டு கூட்டாளிகள் தயக்கம் காட்டுவதாக அவரை கருதச் செய்து ஏமாற்றமளித்துள்ளது.

யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி, கூடுதல் வான்பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இடைமறிப்பு ஏவுகணைகள் வழங்குமாறு கூட்டாளிகளிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“அவர்கள் [யுக்ரேனின் கூட்டாளிகள்] ‘நம் மீது தாக்குதல் நடந்தால் என்ன செய்வது?’ என்று காத்திருக்கிறார்கள்,” என்று ஒல்ஹா கூறுகிறார். “‘ஒருநாள் எனக்கும் நோய் வந்துவிட்டால் என்ன?’ என்று சொல்லி, புற்றுநோயாளிக்கு மருந்தளிக்க மறுப்பது போல இருக்கிறது. ஒருவேளை உங்களுக்கு நோய் வராமல் போகலாம். காலாவதியாகும் முன் அதை அளித்துவிடுங்கள்.”

கீவிலுள்ள ஒரு நிலத்தடி நிலையத்தில் பயணிகள் காணப்படுகின்றனர்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, மெட்ரோ சேவைகள் பாதிக்கப்படுவதால், நீண்ட நேரக் காத்திருப்புகளுக்கு கீவ் பயணிகள் பழகிவிட்டனர்புகலிடங்களில் பாடங்களை படிக்கும் பள்ளி மாணவர்கள் காணப்படுகிறார்கள்.

பட மூலாதாரம், Global Images Ukraine via Getty Images

படக்குறிப்பு, கீவில் புதிய கல்வியாண்டு தொடங்கியபோது, காலை நேரத்தில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை இருந்ததால் பல மாணவர்கள் புகலிடங்களில் வகுப்புகளில் கலந்து கொண்டனர்

நகரின் மற்றொரு பகுதியில், இரண்டு குழந்தைகளின் தாயாரான நடாலியா புஷ்கோவ்ஸ்கா, ஒவ்வொரு இரவும் மூன்று விதமான திட்டங்களை முன்கூட்டியே தயார் செய்து வைத்திருக்கிறார்.

திட்டம் ஏ: இரண்டு உள் சுவர்களின் பின்னுள்ள நடைபாதையில் படுக்கையை விரிப்பது.

திட்டம் பி: குடும்பத்தினரை கட்டடத்தின் பொதுவான வராந்தாவுக்கு மாற்றுவது.

திட்டம் சி: அடித்தளத்திற்குச் செல்வது.

அங்கிருந்தாலும், முழுமையாக பாதுகாப்பாக இருப்பதாகத் தனக்குத் தோன்றவில்லை என்று அவர் ஒப்புக்கொள்கிறார்.

“அத்தியாவசிய பொருட்களுடன் ஒரு பையை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கிறேன்,” என்று 37 வயதான நடாலியா கூறுகிறார்.

“கடுமையான இரத்தக்கசிவை நிறுத்த ஒரு டூர்னிகேட் உள்ளது. கூடுதலாக, ஒரு விசிலும் வைத்திருக்கிறேன். மிக மோசமானது நடந்துவிட்டால், மீட்புப் பணியாளர்களால் எங்களை கண்டுபிடிக்க முடியும்.”

அவருடைய ஒன்பது வயது மகளுக்கும் தனியான அவசரநிலைப் பை உள்ளது. அதில் விளையாட்டுப் பொருட்கள், உதட்டுச் சாயம் மற்றும் ஒரு டூர்னிகேட் உள்ளன. அவரது 12 வயது சகோதரனைப் போலவே, அவரும் முதலுதவி பயிற்சியின் மூலம் டூர்னிகேட்டை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கற்றுக்கொண்டுள்ளார்.

தொடர்ச்சியான தாக்குதல்கள் மிகவும் சோர்வடையச் செய்கின்றன என்று நடாலியா கூறுகிறார்.

அவரது மகன் தாக்குதல்களின் போதும் பலமுறை தூங்கிவிடுகிறார். ஆனால் அவரும் அவரது மகளும் பெரும்பாலும் ஒவ்வொரு முறையும் விழித்துவிடுகின்றனர்.

“தாக்குதல்களால் எனக்கு போதுமான தூக்கம் கிடைப்பதில்லை,” என்று அவர் கூறுகிறார். “போரின் ஐந்தாவது ஆண்டில், இத்தகைய இரவுகளுக்குப் பிறகு மீண்டு வருவது அதிக கடினமாக உள்ளது.”

தாக்குதல்களின் அதிகரித்த தீவிரம், நகரம் முழுவதும் உளவியல் ரீதியாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என அவர் கூறுகிறார்.

“மக்கள் சோர்வடைந்துவிட்டனர். மீண்டு வர அவர்களுக்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை.”

கூடுதல் செய்தி சேகரிப்பு ஜானெட் பால்

இரண்டு புகைப்படங்கள் அருகருகே உள்ளன. இடதுபுறத்தில், நீலம் மற்றும் வெள்ளை கோடுகளுடன் கூடிய சட்டை அணிந்த ஒரு பெண் தன்னைத்தானே புகைப்படம் எடுக்கிறார். அவர் மெதுவாகச் சிரிக்கிறார்; நீண்ட கருமையான முடியுடன் உள்ளார். பின்னணியில் பசுமை மற்றும் பூங்காவைப் போன்ற பகுதி உள்ளது. வலதுபுறப் புகைப்படத்தில், ஒரு சிறுமி குனிந்து அமர்ந்து பழுப்பு மற்றும் வெள்ளை நிற நாயைத் தடவுகிறார். சிறுமி கேமராவிற்கு முதுகைக் காட்டி நிற்கிறார். அவருக்கும் நீண்ட கருமையான முடி உள்ளது; பீச் நிற மேலாடை, ஷார்ட்ஸ் மற்றும் கருப்பு நிற காலணிகளை அணிந்திருக்கிறார்

பட மூலாதாரம், Natalia Bushkovska

படக்குறிப்பு, நடாலியாவாலோ அவரது மகளாலோ இரவு நேரத் தாக்குதல்களின் போது தூங்க முடியவில்லை

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link