செமிகண்டக்டர் துறையில் தமிழ்நாட்டின் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் ரூ.100 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள செமிகண்டக்டர் மையம் தற்போது செயல்பாட்டுக்கு வருவதற்கான அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தத் திட்டத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) இணைந்துள்ளது. மேலும், திட்டத்தை செயல்படுத்துவதற்காக புதிய நிறுவனமும் உருவாக்கப்பட உள்ளது. அந்த நிறுவனத்தின் பெயர் மற்றும் கட்டமைப்பு விரைவில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2026 ஜனவரியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையே கையெழுத்தானது.
செமிகண்டக்டர் துறையில் திறன் மேம்பாடு, நுண் உற்பத்தி, மாதிரி தயாரிப்பு மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி ஆகியவற்றை ஒரே இடத்தில் ஒருங்கிணைப்பதே இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த ரூ.100 கோடி ஒதுக்கீடு புதிதாக அறிவிக்கப்பட்டது அல்ல. இது தமிழ்நாட்டின் ‘தமிழ்நாடு செமிகண்டக்டர் மிஷன் 2030’ திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
வெறும் பயிற்சி மையம் கிடையாது!
இந்த மையம் வெறும் திறன் பயிற்சி வழங்கும் நிறுவனமாக மட்டும் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்கா, இன்குபேஷன் செல் மற்றும் ஆர்.டிபி.ஐ. (RTBI) குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி நாட் மலுபிள்ளை டிடி நெக்ஸ்ட் நாளிதழிடம் கூறுகையில் கூறுகையில், பணியாளர்களின் திறனை வளர்ப்பது, ஆராய்ச்சி மேற்கொள்வது, புதிய தொழில்நுட்பங்களுக்கான மாதிரிகளை உருவாக்குவது மற்றும் அவற்றைத் தயாரிப்புகளாக மாற்றுவது ஆகியவற்றை ஒருங்கிணைப்பதே மையத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
இந்த மையத்துக்காக சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்கா அருகே சுமார் ஒரு ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த மையத்தின் மூலம் செமிகண்டக்டர் துறையின் பல்வேறு பிரிவுகளில் சுமார் 5,000 பேருக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள், பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மற்றும் மூத்த விஞ்ஞானிகள் என பல்வேறு தரப்பினரும் இதில் பயிற்சி பெற உள்ளனர்.
செமிகண்டக்டர் உற்பத்திச் சங்கிலியின் பல்வேறு நிலைகளான தயாரிப்பு, அசெம்பிளி, பேக்கேஜிங், மார்க்கிங் மற்றும் சோதனை உள்ளிட்ட துறைகளில் பயிற்சி வழங்கப்படும்.
இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தித் திட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இத்துறைக்கு தேவையான சிறப்புத் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்குவது முக்கியமாகியுள்ளது.
சிறிய நிறுவனங்களுக்கு உதவும் மைக்ரோ-ஃபேப் வசதி
இந்த மையத்தின் முக்கிய சிறப்பம்சமாக மைக்ரோ-ஃபேப்ரிகேஷன் வசதி அமைய உள்ளது.
பெரிய அளவிலான செமிகண்டக்டர் தொழிற்சாலைகளுக்குச் செல்லாமல், தொடக்க நிறுவனங்களும் சிறிய நிறுவனங்களும் தங்களது புதிய தொழில்நுட்பங்களுக்கான மாதிரிகளை உருவாக்க இந்த வசதி உதவும்.
முழுமையான வணிக உற்பத்தி தொழிற்சாலையாக இந்த மையம் இருக்காது. அதற்குப் பதிலாக, மாதிரி தயாரிப்பு, தொழில்நுட்பத்தைத் தயாரிப்பாக மாற்றுதல் மற்றும் சிறிய அளவிலான உற்பத்தி ஆகியவற்றுக்கு உதவும் வகையில் அமைக்கப்படும்.
மேம்பட்ட ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம்
செமிகண்டக்டர் துறையின் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் பவர் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகளிலும் இந்த மையத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்காக சென்னை ஐஐடியின் ஆராய்ச்சி திறன்களும், அங்கு உருவாகி வரும் ஆழ்தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களின் சூழலும் பயன்படுத்தப்பட உள்ளன.
இதன் மூலம் ஆய்வகங்களில் உருவாகும் புதிய தொழில்நுட்பங்களை நடைமுறைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
மத்திய அரசிடம் இருந்தும் நிதியுதவி?
இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்தும் கணிசமான நிதியுதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) இந்த மையத்துக்கு குறிப்பிடத்தக்க தொகையை வழங்க ஆர்வம் காட்டியுள்ளதாக நாட் மலுபிள்ளை தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுதொடர்பாக தற்போது இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. திட்டத்துக்கான முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உற்பத்தியைத் தாண்டி செல்லும் தமிழ்நாடு
தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் உற்பத்தி சார்ந்த முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில், தொழிற்சாலைகள் அமைப்பது மட்டுமின்றி, அதற்குத் தேவையான திறமையான பணியாளர்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறனையும் வளர்ப்பது அவசியமாகியுள்ளது.
இந்தச் சூழலில், புதிய செமிகண்டக்டர் மையம் இரண்டு முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்று, செமிகண்டக்டர் துறைக்குத் தேவையான திறமையான மனிதவளத்தை உருவாக்குவது.
மற்றொன்று, ஆராய்ச்சி நிலையில் இருக்கும் தொழில்நுட்பங்களை மாதிரிகளாக உருவாக்கி, பின்னர் வணிகப் பொருட்களாக மாற்றுவதற்கான வசதியை ஏற்படுத்துவது.
ஜனவரியில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது நடைமுறைப்படுத்தும் கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ள நிலையில், புதிய நிறுவனம் முறையாக உருவாக்கப்பட்டதும் திட்டம் அடுத்த முக்கிய கட்டத்தை எட்டும்.
இதன் மூலம் செமிகண்டக்டர் உற்பத்தியில் மட்டுமின்றி, ஆராய்ச்சி, சிப் வடிவமைப்பு, மாதிரி தயாரிப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப உருவாக்கத்திலும் தமிழ்நாடு முக்கிய மையமாக உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
