புதுடில்லி: பொருளாதார சார்புநிலை குறித்து இந்தியா முன்கூட்டியே விடுத்த எச்சரிக்கையை ஐரோப்பா புறக்கணித்து விட்டது என்று பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர் கூறியுள்ளார்.
இந்தியா வந்துள்ள பெல்ஜியம் பிரதமர் டி வேவர், டில்லியில் நடந்த தொழில் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது; ஐரோப்பாவில் கடந்த சில ஆண்டுகளில் தீவிரமான ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. மிக நீண்ட காலமாக நமது சந்தைகளில் உற்பத்தி செலவை விட குறைவான விலையில் அதிகப்படியான உற்பத்தி திறன் கொட்டப்படுகிறது. இது உள்நாட்டு தொழிலகளை பாதித்தது. வெளிநாட்டு விநியோகஸ்தர்களை அதிகளவில் சார்ந்திருக்கும் நிலையை ஐரோப்பாவிற்கு ஏற்படுத்தியது.
இதை நம்மை விட முன்பே இந்தியா கண்டறிந்தது. நமக்கு எச்சரிக்கை கொடுத்தது. ஆனால், நாம் கேட்கவில்லை. பொருளாதார உறவுகள், அரசியல் அழுத்தக் கருவிகளாக மாற்றப்படும் சாத்தியக்கூறு உட்பட இதுபோன்ற சார்புநிலை உருவாக அனுமதிப்பதன் விளைவுகளை ஐரோப்பா எதிர்கொண்டு வருகிறது.
இது குறித்து ஐரோப்பாவை நீண்ட காலத்திற்கு முன்பே பிரதமர் மோடி எச்சரித்து இருந்தார். ஆனால் அவர் புறக்கணிக்கப்பட்டார். அவர் சொல்வதை கேட்கவில்லை. ஆனால், இப்போது நாங்கள் செவி சாய்க்கிறோம்.
புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை நிலவும் நேரத்தில் இந்தியாவை மிகவும் முக்கியமான நம்பகமான கூட்டாளியாக பெல்ஜியம் கருதுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
